
சேலம்,
சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், உருக்காலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் தேசம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் தேசம் கட்சியின் நிறுவன தலைவர் பாக்யராஜ் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை கண்டிப்பது, உருக்காலையை அரசே ஏற்று நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு மீண்டும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரிடம் ஒப்படைக்க வேண்டும்.
தமிழகத்தில் நடந்து வரும் ஆணவ கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும். சாதி மோதல்களை தூண்டிவிடும் நபர்கள் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சேலம் மாநகர செயலாளர் அடைக்கலம் வரவேற்றார். ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட தலைவர் அந்தோணி, சேலம் மாநகர தலைவர் தாமஸ் பாபு, மாநில தொழிற்சங்க பொதுச்செயலாளர் தனுஷ், மண்டல தலைவர் மாரியப்பன், மாநில அமைப்பாளர் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.