
திருப்பூரில் போலீஸ் துரத்தியதில் தொழிலாளி ஒருவர் சாக்கடையில் விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். பனியன் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இவர் நேற்றிரவு பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், வாகனத்தை நிறுத்தும் படி சமிக்ஞை செய்தனர்.
ஆனால் வாகனத்தை நிறுத்தாமல் சுரேஷ் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ரோந்து வாகனத்தில் போலீசார் அவரை துரத்தத் தொடங்கினர். வீரபாண்டி பிரிவு அருகே வந்த போது நிலைதடுமாறிய சுரேஷ் அருகில் இருந்த சாக்கடைக்குள் விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த உறவினர்கள் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உமா பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடமால் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.