
வறட்சி நிவாரணம், பயிர்கடன் தள்ளுபடி கேட்டு டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சையில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியுள்ளது.
வறட்சி நிவாரணத்தை அதிகரிக்க வேண்டும், வங்கியில் பெற்ற பயிர்கடனை தள்ளுபடிசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் மனுக்களை மட்டும் பெற்றுக் கொள்ளும் மத்திய அரசு, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தொடர்ந்து கள்ளமெளனம் சாதித்து வருகிறது. இதனால் அதிருப்தியும் மனவேதனை அடைந்த விவசாயிகள் நேற்று முன்தினம் மரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பைக் கூட்டியது.
பெருகும் ஆதரவு,
டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் களம் அமைத்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, நடிகர் சங்கத்தின் சார்பாக விஷால், உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மெரீனாவைப் போல் மீண்டும் ஒரு புரட்சி
ஜல்லிக்கட்டுக்காக மெரீனாவில் நடைபெற்ற புரட்சியைப் போல டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கும் தமிழகம் முழுவதும் ஆதரவு வலுத்து வருகிறது. அதன் முதற்கட்டமாக திருச்சி லால்குடியில் விவசாயிகள் உள்பட ஏராளமானோர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.