
காஞ்சிபுரம்
வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி அரசு அலுவலர்களுக்கான ஓய்வூதியதாரர் குறை தீர் முகாம் நடைபெற உள்ளது என்று ஆட்சியர் பா.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “ஓய்வுப் பெற்ற அரசு அலுவலர்களுக்கான குறைதீர் முகாம் வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த முகாமிற்கு ஆட்சியர் மற்றும் மாநில ஓய்வூதிய இயக்குநர் ஆகியோர் தலைமை தாங்குவர். இதில், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக குறைகள் ஏதேனும் இருப்பின் அதற்கான முறையீட்டினை மூன்று நகல்களுடன் வரும் 30-ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், இந்தக் கூட்டத்தில் முறையீடுகளை அளிக்கும் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர் சங்கங்களின் சார்பில் ஒரு சங்கத்திற்கு ஒரு நிர்வாகி வீதம் கலந்து கொள்ளலாம்.
அதனோடு, ஜனவரி 30-ஆம் தேதிக்குள் பெறப்படும் முறையீடுகள் மீது மட்டுமே குறை களைவு அறிக்கையினை சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து பெற்று, பிப்ரவரி 13-ஆம் தேதி நடத்தப்படும் ஓய்வூதியதாரர் குறை தீர் கூட்டத்தில் நடவடிக்கை விவரங்கள் தெரிவிக்கப்படும்.
எனவே, ஓய்வூதியதாரர்கள் தங்கள் குறைகளை நிர்ணயிக்கப்பட்ட நாளுக்குள் ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று அதில் தெரிவித்துள்ளார்.