ஆட்சியர் அலுவலகத்தில் 70 வயது பாட்டி தீக்குளிக்க முயற்சி; காவலர்கள் இருந்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு...

First Published Apr 17, 2018, 7:02 AM IST
Highlights
A 70 years old lady tried to burn herself alive in collector office


இராமநாதபுரம் 

இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் 70 வயது பாட்டி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளர்களால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ளது பெருமாள் கோவில் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவரின் மனைவி பாண்டியம்மாள் (70). இவர் நேற்று காலை தனது மகள் முருகேஸ்வரியுடன் இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். 

அங்கு, மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி அந்த பாட்டி தீக்குளிக்க முயன்றார். 

இதனைக் கண்ட தீயணைப்புத்துறை ஊழியர் உடனடியாக அவரின் உடலில் தண்ணீர்  ஊற்றினார். பின்னர், அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளர்கள் பாதுகாப்பாக அவரை மீட்டு அழைத்து சென்றனர். 

இதுகுறித்து பாண்டியம்மாள் காவலாளர்களிடம் கூறியது: "எனக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருபவர் வீட்டை காலி செய்யாமல் வீட்டினை அபகரிக்க முயன்று வருகிறார். வீட்டை காலி செய்யும்படி கூறினால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.  

ஐந்து பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். ஒரே ஒரு மகன் உள்ளான். உடல் ஊனமுற்ற நிலையில் உள்ளதால் எங்களிடம் உள்ள வீட்டை அபகரிக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்.

இதுகுறித்து ஆட்சியர், காவலாளர்கள் உள்ளிட்டோருக்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசாரிக்க வரும் அதிகாரிகளையும் அரிவாளால் வெட்ட வருவதால் எனக்கு நியாயம் கிடைக்க வழி இல்லாமல் போய்விட்டது.

எனது சொத்தினை காப்பாற்ற வழியில்லாததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன்" என்று அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து காவலாளார்கள் அழைத்து சென்று விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். 

ஆட்சியர் அலுவலகத்தில் 70 வயது பாட்டி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!