அரசு பழத்தோட்டத்திற்குள் புகுந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள்; பொங்கல் சமைத்து சாப்பிட்டு போராட்டம்...

 
Published : Apr 17, 2018, 06:34 AM ISTUpdated : Sep 19, 2018, 02:15 AM IST
அரசு பழத்தோட்டத்திற்குள் புகுந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள்; பொங்கல் சமைத்து சாப்பிட்டு போராட்டம்...

சுருக்கம்

More than 100 women held in struggle Pongal cooked and ate protest continues

இராமநாதபுரம்
 
இராமநாதபுரத்தில் உள்ள ஓரியூர் அரசு பழத்தோட்டத்திற்கு புகுந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்வரை போராட்டத்தை தொடர அவர்கள்  முடிவெடுத்துள்ளனர். 

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் தாலுகா ஓரியூர் திட்டை பகுதியில் அரசு பழத்தோட்டம் அமைத்து வருகிறது. 

இந்தப் பழத்தோட்டத்திற்காக ஓரியூர் திட்டை கிராமத்தில் உள்ள மேய்ச்சல் நிலம், ஆதி திராவிட மக்களின் சுடுகாடு, வழிபாட்டுத் தலம் போன்றவற்றை அரசு கையகப்படுத்தி உள்ளது. 

அவற்றை மீண்டும் கிராம மக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென ஓரியூர் அரசு பழத்தோட்டத்திற்குள் புகுந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்களை தடுத்து நிறுத்தினர். அதன்பின்னர் பழத்தோட்டத்திற்குள்ளே உள்ள வழிபாட்டுத் தலம் அருகில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்ததும் திருவாடானை தாசில்தார் சாந்தி, புல்லூர் வருவாய் ஆய்வாளர் சாரதா, கிராம நிர்வாக அலுவலர் சேக்ரட்நாத், காவல் ஆய்வாளார் புவனேஸ்வரி, எஸ்.பி.பட்டினம் காவல் உதவி ஆய்வாளர் சிலைமணி மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். 

அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேச்சு வார்த்தைக்கு வருவார்கள் என்று அதிகாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், மக்கள் யாரும் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை. இதனால் அதிகாரிகள் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 

இதனையடுத்து அங்கு கூடியிருந்த பெண்கள் அனைவரும் அங்குள்ள குருசடி வழிபாட்டுத் தலம் அருகில் பொங்கல் வைத்து சாப்பிட்டுவிட்டு போராட்டத்தைத் தொடர்ந்தனர். 

இதுகுறித்து கிராம மக்கள், கிராமிய மகளிர் மேம்பாட்டு அமைப்பினர், "ஓரியூர் கிராமத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிணறுகள் அனைத்தும் வறண்டு போய்விட்டன. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாமல் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் குடிநீருக்காக மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். 

எனவே, மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் ஓரியூர் கிராம மக்களின் குடிநீர் தேவையை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓரியூர் திட்டை கிராம ஆதிதிராவிட மக்கள் சுடுகாடு, குருசடி புனித வழிபாட்டுதலம், விளைநிலங்களுக்கு செல்லும் பாதையை பழத்தோட்டம் அமைக்க கையகப்படுத்தி அடைத்துள்ளனர். 

எனவே, இங்கு மக்கள் வந்து செல்ல சாலை வசதியும், குருசடியில் வழிபட தேவையான வசதியும், பழத்தோட்டத்திற்கு போடப்பட்டுள்ள ஆழ்குழாய் மூலம் ஓரியூர் திட்டை கிராமத்திற்கு குடிநீரும் வழங்க வேண்டும். 

அதிகாரிகள் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும்" என்று அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!