
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி, பேரறிவாளன், உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் முடிவை தமிழக அரசே எடுக்க அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் கடந்த 6-ம் தேதி இறுதி தீர்ப்பை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து இது பற்றி ஆலோசிக்க நேற்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 7 பேரின் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது குறித்த பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலாலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 7 தமிழர்களின் விடுதலை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளர் ராஜகோபால், டெல்லி விரைந்தார். ஆளுநர் பன்வாரிலால் இந்த பிரச்சனையில் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அமைச்சரவை முடிவு செய்து பரிந்துரைப்பதை ஆளுநர் ஏற்று ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று உள்ளது. அமைச்சரவை முடிவை ஆளுநர் நிராகரிக்க முடியாது என்று சட்ட நிபுணர் கருத்து தெரிவித்துள்ளனர். 7 தமிழர்களின் விடுதலை பற்றி 4 விதமான முடிவுகளில் ஏதாவது ஒன்றை ஆளுநர் எடுக்க வாய்ப்புள்ளது. தமிழக அமைச்சரவை பரிந்துரையை அப்படியே ஏற்றுக் கொண்டு 7 பேரை விடுதலை செய்ய உத்தரவிடலாம்.
அமைச்சரவை பரிந்துரை மீது ஆளுநர் முடிவெடுக்க எந்த கால நிர்ணயமும் அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை. 7 பேரின் விடுதலை பரிந்துரையை சில நாட்கள் கிடப்பில் போடலாம். 7 பேரை விடுதலை செய்வது பற்றி மத்திய அரசிடம் ஆளுநர் யோசனை கேட்கலாம். அதே நேரத்தில் தமிழக அமைச்சரவை எடுத்துள்ள முடிவை மறுபரிசீலனை செய்யவும் ஆளுநர் உத்தரவிடலாம். தற்போது ஆளுநர், 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையை தொடங்கியுள்ளதாக தெரிகிறது. எனவே ஆளுநர் எப்போது முடிவை அறிவிப்பார்; ஆளுநரின் முடிவு 7 தமிழர்களுக்கு சாதகமாக இருக்குமா? என்பது விரைவில் தெரியும் என்று கூறப்படுகிறது.