
தருமபுரி
தருமபுரியில் 60 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும் தற்காலிக ஓட்டுநர்களை நம்பாததால் பெரும்பாலான பயணிகள் தனியார் பேருந்துகளில் பயணம் செய்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் 13 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 5-வது நாளாக நேற்று தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று அரசு பேருந்துகள் இயக்கம் குறைவாக இருந்தது. தனியார் பேருந்துகள் வழக்கம்போல இயங்கின. எனினும், பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.
தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்து வெளிமாவட்டங்கள் மற்றும் பெங்களூருக்கு செல்லும் பேருந்து மட்டும் குறைந்தளவில் இயக்கப்பட்டன.
மாற்று ஓட்டுநர்கள் மூலமும், தற்காலிக ஓட்டுநர்கள் மூலமாகவும் அரசு பேருந்துகளை இயக்கத் தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
நேற்று மாலை நிலவரப்படி தர்மபுரி மாவட்டம் முழுவதும் 60 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
மேலும், தருமபுரி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மேல்படிப்புக்காக அரசு நகர பேருந்துகள் மூலம் செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று அரசு பேருந்துகள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டதால் பள்ளி முடிந்து வீடு திரும்ப முடியாமல் மாணவ, மாணவிகள் நீண்ட நேரம் பேருந்து நிலையத்திலேயே காத்திருந்தனர்.
தனியார் பேருந்துகளில் கூட்டம் அதிகளவில் இருந்ததால் மாணவர்கள் முந்திக் கொண்டு பேருந்துகளில் ஏறினர். சில மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தனர்.