50 நாட்களில் இத்தனை கோடி அபராதம் வசூலா? காவல்துறையின் அதிர்ச்சி ரிப்போர்ட்!!

By Narendran SFirst Published Jun 3, 2022, 7:51 PM IST
Highlights

சென்னையில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக கடந்த 50 நாட்களில் சுமார் ரூ.6.5 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

சென்னையில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக கடந்த 50 நாட்களில் சுமார் ரூ.6.5 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுக்குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை 2018 மார்ச் மாதம் முதல் பணமில்லா பரிவர்த்தனை முறைக்கு மாற்றப்பட்டது. ஆரம்ப காலங்களில் அபராதம் செலுத்துவது அதிகமாக இருந்த போதிலும், சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் பலர் அபராதம் செலுத்தாததால் அது காலப்போக்கில் மோசமடைந்தது. இந்தச் தேக்க நிலையை நேர் செய்ய சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் அழைப்பு மையங்கள் முறையை அறிமுகப்படுத்த முடிவுசெய்தனர். அதன்படி சென்னை பெருநகர காவல் ஆணையர், திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப அவர்கள் கடந்த 11 ஆம் தேதி அன்று 10 அழைப்பு மையங்களை திறந்து வைத்தார். அண்ணாநகர் TROZ மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டறை ANPR கேமரா மையங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைக் கையாள்வதற்காக மேலும் இரண்டு தனித்தனி அழைப்பு மையங்கள் பின்னர் சேர்க்கப்பட்டன. இந்த 12 காவல் அழைப்பு மையங்களின் செயல்திறன் 50 நாட்கள் செயல்பாடாக ஏப்ரல் 12 முதல் மே.31 வரை ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த 12 காவல் அழைப்பு மையங்களிலிருந்து தொலைபேசி வாயிலாக நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் வழக்குகள், சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் அபராதம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. தவறும் பட்சத்தில் மேற்படி வழக்குகள் மெய்நிகர் நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த முயற்சியின் காரணமாக கடந்த 50 நாட்களில் 1,27,066 பழைய வழக்குகளுக்கான (மார்ச் 2019 முதல் பதியப்பட்ட பழைய வழக்குகள்) அபராதத் தொகை ரூபாய் 1,93,75,970 விதிமீறிய வாகன ஓட்டிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டது. இதில் 67 வாகன ஓட்டிகள் 100க்கும் அதிகமான விதிமீறல்களில் ஈடுபட்டு அபராதம் செலுத்தினார்கள். ஒரே வாகன ஓட்டி அவருடைய ஒரே வாகனத்திற்காக 274 விதிமீறல்களில் ஈடுபட்டு அபராதம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு பகுதியாக, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் அழைப்புச் செய்து 1181 வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூபாய் 1,19,12,000 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

இதில் பெரும்பாலனோர் சராசரியாக ரூபாய் 10,000 அபராதம் செலுத்தியவர்கள். ஆக மொத்தம் 1,28,247 பழைய வழக்குகளில் ரூபாய் 3,12,87,920 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இது மட்டுமில்லாமல் புதிய வழக்குகளுக்காக ரூபாய் 3,37,34,800 அபராதமாக வசூலிக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் இந்த 50 நாட்களில் 2,73,284 வழக்குகளில் ரூபாய். 6,50,22,770 அபராத தொகையாக வசூலித்தது. அபராதம் செலுத்துவதற்கான வசதியை மேம்படுத்த, மொத்த எஸ்.எம்.எஸ் அமைப்பு, கட்டண வசதி மையம் மற்றும் கட்டண தளங்களுடன் ஒப்பந்தம் உள்ளிட்ட கூடுதல் நடவடிக்கைகளை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை நடைமுறைப்படுத்தியுள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வழங்கும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அனைத்து வாகன ஓட்டுநர்களும் தங்கள் வாகனத்திற்கு எதிராக ஏதேனும் வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை ஆன்லைனில் சரிபார்த்து, அபராதத் தொகையை விரைவில் செலுத்துமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!