முக்கொம்பு பாலம் இடிந்ததால் 50 கிராம மாணவர்களின் பள்ளிப்படிப்பு பாதிப்பு; ஆய்வுக்குச் செல்லும் முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 24, 2018, 9:23 AM IST
Highlights

திருச்சியில் உள்ள மேலணையின் மதகுகள் உடைந்து விழுந்தபோது முக்கொம்பு பாலமும் உடைந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இங்கு முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், இப்பகுதியைச் சுற்றியுள்ள 50 கிராம மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சியில் உள்ள மேலணையின் மதகுகள் உடைந்து விழுந்தபோது முக்கொம்பு பாலமும் உடைந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இங்கு முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், இப்பகுதியைச் சுற்றியுள்ள 50 கிராம மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 

காவிரி ஆற்றின் குறுக்கே திருச்சி மாவட்டத்தின் முக்கொம்பு என்னுமிடத்தில் உள்ள அணை முக்கொம்பு மேலணை. திருச்சியில் இருந்து கரூர் செல்லும் வழியில் உள்ளது. இதற்கு ஒரு சிறப்பு உண்டு. அது என்ன தெரியுமா? 

இங்கிருந்துதான் காவிரி ஆறானது கொள்ளிடம், காவிரி என்று இரண்டாகப் பிரிகிறது.  'கொள்ளிடம் ஆறு' காவிரியின் வடக்கு பக்கமாகவும், காவிரியின் தென்புறம் முக்கொம்பும் உள்ளன. இந்த அணை 1836-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சர் ஆர்தர் காட்டன் என்பவரால் கட்டப்பட்டது. 

இந்த அணைக்குப் பின்னால் சுவாரஸ்யமான கதை இருக்கு. கல்லணையால் ஈர்க்கப்பட்ட காட்டன் அதேபோல அணையைக் கட்டவிரும்பி 'முக்கொம்பு' அணையைக் கட்டினார். சில நூறு வருடங்கள் ஆகியுள்ள இந்த அணை நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கரிகாலச் சோழன் கட்டிய கல்லணை கம்பீரத்துடன் நிற்கிறது. 

முக்கொம்பில் நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணி அளவில் மேலணையில் உள்ள 9 மதகுகள் திடீரென இடிந்து விழுந்தன. இதனால் அணைக்கட்டின் மேல் பகுதி பாலமும் அப்படியே தண்ணீருக்குள் விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

இடிந்துவிழுந்த கொள்ளிடம் மேலணையின் தலைப்பகுதி திருச்சி - சேலம் இடையேவுள்ள சாலையில் 'வாத்தலை' என்ற இடத்தின் அருகேவுள்ளது. வாத்தலை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் குணச்சீலம், ஆமூர், சென்னக்கரை, சிறுக்காம்பூர், குருவம்பட்டி உள்பட சுமார் 50 கிராமங்கள் உள்ளன.

இங்குள்ள பொதுமக்கள், வியாபாரிகள் கரூர் சாலை வழியாகதான் திருச்சிக்கு வரமுடியும். அதற்காக இந்த அணைக்கட்டுப் பாலத்தைதான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அணை இடிந்துவிழுந்துவிட்டது. இதனால் தற்போது போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் 50 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் என அனைவரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்தக் கிராமங்களைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் பெரும்பாலும் திருப்பராய்த்துறை, ஜீயபுரம், அல்லூர் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கின்றனர். 

இவர்கள் இனி இந்தப் பள்ளிகளுக்கு வாத்தலை பகுதியில் இருந்து கரூர், குளித்தலை வழியாகவே, அல்லது திருச்சிக்கு வழியாகவோதான் செல்ல முடியும். இப்படி அவர்கள் நாள்தோறும் பல கிலோ மீட்டர் தொலைவு சுற்றிக்கொண்டுச் செல்ல வேண்டும். 

எனவே, "மாணவர்களின் படிப்பு மற்றும் அவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு வாத்தலை பகுதியில் இருந்து மாணவ - மாணவிகளை அழைத்துச் செல்ல மாவட்ட நிர்வாகம் சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும்" என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் மேலும் சில மதகுகள் உடையும் அபாய நிலையில் உள்ளன. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். முக்கொம்புக்கு சென்று கொள்ளிடம் அணையின் உடைந்த பகுதிகளை பார்வையிடுகிறார். சீரமைப்புப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்..

click me!