
வேலூர்
8% கேளிக்கை வரியை ரத்து செய்யக் கோரி வேலூரில் இருக்கும் 50 திரையரங்குகளும் மூடப்பட்டன.
திரையரங்குகள் மீதான தமிழக அரசின் 8 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்யக் கோரி வேலூர் மாவட்டத்தில் 50 திரையரங்குகள் வெள்ளிக்கிழமை முதல் காலவரையின்றி மூடப்பட்டன.
நாடு முழுவதும் திரையரங்குகளுக்கான ஜிஎஸ்டி வரை 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதேசமயம், மாநில அரசும் கேளிக்கை வரியாக 8 சதவீதம் வசூலிக்கிறது.
இந்த இரண்டு வேறு வரி விதிப்புகளால் திரையரங்குகள் நட்டத்தில் இயங்குவதாக திரையரங்க உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனையடுத்து, "தமிழக அரசு 8 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்,
இருக்கைகளைக் குறைக்க அனுமதிக்க வேண்டும்,
திரையரங்கு உரிமத்தை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திரையரங்கு உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
அதன்படி, வேலூர் மாவட்டம் முழுவதுமுள்ள 50 திரையரங்குகள் நேற்று மூடப்பட்டிருந்தன. இதனால் திரையரங்குகளுக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர், "கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள 50 திரையரங்குகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. திரையரங்குகள் மீதான வரிவிதிப்புகளை அரசு திரும்பப் பெற வேண்டும்" என்று கூறினர்.