சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழாவை யொட்டி, இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா மூடப்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் இன்று முதல் நடக்கவிருக்கிறது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா நடைபெறவிருக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு, உரையாற்றுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நாளை முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 14 நாட்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகின்றன.
மேலும் படிக்க:செஸ்ஸூடன் பெருமை மிகு தொடர்புடைய தமிழகம்.! ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்காக ஆர்வமுடன் காத்திருக்கிறேன்- மோடி
இதில் 188 நாடுகளில் இருந்து 3000க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள், வீராங்கனைகள் பங்குப்பெற வருகை புரிந்துள்ளனர். இந்நிலையில் சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை மாநகர் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர் செல்லும் வழிநெடுகிலும் பரதநாட்டியம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேரு விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் விழாவை தொடங்கி வைப்பதற்கு முன்பாக, கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
மேலும் படிக்க:Mkstalin- Chess: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று ஆரம்பம்...முதல்வர் ஸ்டாலின் செஸ் விளையாடி அசத்தல்...
இதனிடையே செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை முன்னிட்டு இன்று மட்டும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வணடலூர் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா இன்று செயல்படாது என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நாளுக்கு மாற்றாக ஆகஸ்ட் 2 ஆம் தேதி விடுமுறை நாளான செவ்வாய்கிழமை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.