ரயிலில் பெண்களை ஈவ் டீஸிங் செய்தால் 3 ஆண்டு சிறை!

By vinoth kumarFirst Published Sep 24, 2018, 2:58 PM IST
Highlights

ரயிலில் பயணம் செய்யும் பெண்களை ஈவ்டீஸிங் செய்யும் குற்றவாளிகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரும் படி அரசுக்கு ரயில்வே பாதுகாப்புப் படை பரிந்துரை செய்துள்ளது.

ரயிலில் பயணம் செய்யும் பெண்களை ஈவ்டீஸிங் செய்யும் குற்றவாளிகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரும் படி அரசுக்கு ரயில்வே பாதுகாப்புப் படை பரிந்துரை செய்துள்ளது. ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையில், 2014-16-ம் ஆண்டுவரை ரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.2014-ம் ஆண்டில் 448 என்ற குற்ற எண்ணிக்கை, 2015-ல் 553-ஆக அதிகரித்துள்ளது. 2016-ம் ஆண்டில் 606 ஆகவும் அதிகரித்தது. 

இதுபோன்ற குற்றச் செயல்களைத் தண்டிக்க ரயில்வே சட்டத்தில் திருத்தங்கள் செய்ய ரயில்வே பாதுகாப்பு படை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதன்படி ரயிலில் பயணம் செய்யும் பெண்களை துன்புறுத்தினாலோ அல்லது கிண்டல் செய்தாலோ 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க அரசுக்கு ரயில்வே பாதுகாப்புபடை பரிந்துரை செய்துள்ளது. 

இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புபடை அதிகாரி ஒருவர் கூறுகையில், ரயிலில் பயணம் செய்யும் பெண்களை தாக்கினாலோ அல்லது கிண்டல் செய்தாலோ, பெண்களுக்கான பெட்டியில் ஆண்கள் அமர்ந்திருந்தாலோ நாங்கள் ரயில்வே போலீஸார் அனுமதியின்றி குற்றவாளிகளை கைது செய்ய முடியாது. குற்றவாளிகளை நாங்களே கைது செய்ய அனுமதி கிடைத்தால் விரைவாக நடவடிக்கை எடுக்க முடியும். 

மேலும், பெண்கள் பெட்டியில் ஆண்கள் பயணம் செய்தால், தற்போது 500 அபராதம் விதிக்கப்படுகிறது, இதை ரூ.1000 ஆக உயர்த்தி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இதுதவிர இடிக்கெட்டில் முறைகேடு செய்பவர்கள் மீது கடும் அபராதம் விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

click me!