
ஸ்டெர்லைட் ஆலைக்கு நிரந்திர தடைவிதிக்கக் கோரி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைக்க முயன்றதால் இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியே கலவரமானது. மேலும் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள், ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் புகுந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த அரசு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. போலீசாரால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து கல்வீச்சின் மூலம், ஆட்சியர் அலுவலகமே சூறையாடப்பட்டது.
போராட்டக்காரர்கள் ஆவேசத்தை பார்த்த, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியும், தடியடி நடத்தியும் மக்களை விரட்டினர்.
அதையும் பொருட்படுத்தாத மக்கள் கண்ணீர் புகைக்குண்டு வீசும் வாகனத்தையும், போலீசாரையும் ஓட ஓட விரட்டி அனுப்பினர். இதனால் நிலையை கட்டுக்குள் கொண்டு வர முடியாத போலீசார் திணறினர். இதில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். போலீசாரின் தூப்பாக்கி சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதேநேரம், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறி ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.