
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் 3 பெண் வேட்பாளர்கள் மர்ம கும்பலால், கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதில் ஒரு வேட்பாளரின் கணவர் தனது 3 வயது குழந்தையுடன் பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. அதில் சுயேட்சை வேட்பாளர்கல் 10 வார்டுகளிலும், தி.மு.க. 3 வார்டுகளையும், அ.தி.மு.க., காங்கிரஸ் தலா ஒரு வார்டையும் கைப்பற்றி இருந்தன.இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், 4 சுயேட்சை வேட்பாளர்கள் அதிரடியாக திமுகவில் இணைந்தனர். இதனால் திமுகவின் பலம் 7 ஆக உயர்ந்தது. இதனால் மொத்தமுள்ள 15 வார்டுகளில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வென்ற 1 இடத்தையும் சேர்த்து திமுக 8 இடங்கள் பிடித்து பெரும்பான்மை கொண்டிருந்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. மறைமுக தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான தலைவர்களை வாக்களித்து தேர்ந்தெடுப்பர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சி அலுவலகத்தில், அதன் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.பேரூராட்சி தலைவர் தேர்தலில் 7-வது வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது.
காலையில் தலைவர் தேர்தலில் பங்கேற்பதற்காக வந்த வார்டு உறுப்பினர்களில் 3 பேரை மர்மகும்பல் காரில் கடத்தி சென்றதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணி பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்திருந்த வார்டு உறுப்பினர்கள் அனைவரும் திமுக வேட்பாளர் ராஜேஸ்வரி போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, வெளியே வந்தனர். அப்போது3-வது வார்டு சுயேட்சை உறுப்பினர் பிரபாவதி, 12-வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினர் சந்தான லட்சுமி, 13-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் பொன்னரசி ஆகிய 3 பேரையும் காரில் வந்த மர்ம கும்பல் கடத்திச்சென்றனர். இதனால் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அறிந்த சுயேட்சை வேட்பாளர் பிரபாவதியின் கணவர் சேஷாராவ் தனது 3 வயது குழந்தையுடன் அங்கு வந்து பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மனைவியை உடனடியாக மீட்க வேண்டும். இல்லையெனில் தற்கொலை செய்வேன் என்று மிரட்டல் விடுத்தார்.அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர். காரில் கடத்தப்பட்ட 3 பெண் கவுன்சிலர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
ஆரணி பேரூராட்சி துணைத்தலைவர் பதவிக்கு 10-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் கண்ணதாசன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் கடலூர் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு போட்டியிட முயற்சித்தவரின் கணவர், திமுகவின் 23 கவுன்சிலர்களை அழைத்துக் கொண்டு புதுச்சேரிக்கு சென்றுவிட்டார். நேற்று இரவே 23 கவுன்சிலர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தால் கடலூர் திமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.