
காங்கேயம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வந்த 3 குழந்தைகளுக்கு தவறான மருந்து வழங்கப்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அலட்சிய மருத்துவனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மருத்துவ செலவுகளை வழங்க கோரியும் காங்கேயம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கயம் அருகே உள்ள நெய்க்காரன்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் கூலி தொழிலாளியான இவரது மனைவி ரம்யா. அவர்களுடய மகள் சாதனா(6) , மகன்சித்தார்த் (2) ஆகியோருக்கு காய்ச்சல் சளி இருந்தால் நேற்று காலை காங்கயம் அரசு மருத்துவமனைக்கு 2 பேரையும் ரம்யா அழைத்துசென்றுள்ளார். அங்கு டாக்டரை பார்த்துவிட்டு மருந்து வாங்கி கொண்டு ஊருக்கு சென்று விட்டார். வீட்டில் மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட மருந்தை குழந்தைகள் இருவருக்கும் கொடுத்துள்ளார். மேலும் பக்கத்து வீட்டை சேர்ந்த லோகநாதன் என்பவரை மகள் தனுஸ்ரீ (7) என்பவருக்கும் சளிக்காக இந்த மருந்தை ரம்யா கொடுத்துள்ளார் .
மருந்தை குடித்த சாதனா மற்றும் அவரது தம்பி சித்தார்த் ஆகியோருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாந்தியும் எடுத்துள்ளனர் இதேபோல தனுஸ்ரீக்கும் வாந்தி வந்துள்ளது. இதையடுத்து 3 குழந்தைகளையும் காங்கயத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஈரோடு மருத்துவமனைக்குகொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட 3 குழந்தைகளும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துமனையில் சேர்க்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையறிந்த அப்பகுதிமக்கள் பெண்கள் உட்பட சுமார் 100 மேற்பட்டோர் காங்கேயம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சிய போக்கால் 3 குழந்தைகள் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் அளித்தனர். ஆனால் மருத்துவமனை தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு வராததால் முற்றுகை போராட்டம் சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக நடந்து வருகிறது.
தொழிற்சாலைகளும் கிராமப்பகுதிகளும் நிறைந்துள்ள காங்கேயம் பகுதியில் கிராமப்புற ஏழை எளியமக்களும்,தொழிலாளர்களும் காங்கேயம் அரசு மருத்துவமனையையே நம்பியுள்ளனர். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக போதிய மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.
அதேபோல பணிபுரியும் மருத்துவர்களும் , ஊழியர்களும் முறையான சிகிச்சை வழங்காமல் மெத்தனம் காட்டிவருவதாக பலமுறை புகார் எழுந்தும் எவ்விதநடவைக்கையும் எடுக்காமல் தமிழக சுகாதார துறை அலட்சியம் காட்டிவருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.