
8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2 ஜி ஊழல் வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் ஜூலை மாதம் தீர்ப்பு வர வாய்ப்புள்ளதாக வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பி.சைனி தகவல் தெரிவித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டு தொலை தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பொறுப்பேற்றார்.
அப்போது, முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அலைக்கற்றை விற்கப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன.
இதைத் தொடர்ந்து, 2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்து சிபிஐ வழக்கு விசாரணையைத் தொடங்கியது. இதில் தொடர்புடைய ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.
ஆ.ராசா, தி.மு.க எம்பி., கனிமொழி, தயாளுஅம்மாள் உள்ளிட்டோர் மீது நீதிமன்றத்தில் சிபிஐ வழக்குத் தொடர்ந்தது. இவர்கள் மீது மூன்று வழக்குகள் தாக்கல்செய்யப்பட்டன.
இந்த வழக்கிற்காக தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு, நீதிபதி ஓ.பி.ஷைனி வழக்கை விசாரித்து வந்தார்.
இருதரப்பு சாட்சியமும் முடிந்த நிலையில், ஆ.ராசா நேரில் ஆஜராகி தன்னுடைய தரப்பு இறுதி வாதத்தை எடுத்து வைத்தார்.
அரசு மற்றும் குற்றம்சாட்டவர்கள் தரப்பு தங்கள் இறுதிவாதத்தை ஏப்ரல் 26-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று நீதிபதி ஷைனி உத்தரவிட்டார். அதன்படி இறுதி வாதம் முடிவடைந்தால் ஜூலை மாதம் தீர்ப்பு வர வாய்ப்புள்ளதாக நீதிபதி ஓ.பி.சைனி தகவல் தெரிவித்துள்ளார்.