
தொழிலாளர் தினமான மே 1-ந்தேதி இரவு 9 மணி முதல் 12 மணி வரை வானில், கடவுள் முருகன் ஜோதி வடிவில் காட்சி தர உள்ளார் என ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கைலாசம் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-
திருச்சி மாவட்டம், துறையூரில் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின்ஓங்காரக் குடில் மூலம் மக்களுக்க தொண்டு செய்து வருகிறோம். எங்களின் சங்க நிறுவனரும், தலைவருமான ஆறுமுக அரங்க மகா தேசிக சாமிகள், முருகப்பெருமான் கலியுகத்து அவதாரம் அவரால் இந்த உலகம் கலியுக மாற்றங்களை காணப்போகிறது என்று கூறியுள்ளார்.
மனிதர்களின் ஆட்சி முடிவு பெற்று ஞான சித்தர்களின் ஆட்சி தொடங்குவதற்கு சாட்சியாக தொழிலாளர் தினமான மே 1-ந்தேதி இரவு 9 மணி முதல் 12 மணி வரை முருகப்பெருமானே வானில் ஜோதி வடிவில் காட்சி தர உள்ளார். இந்த காட்சியை கன்னியாகுமரியை மையமாக வைத்து 500 கி.மீ. சுற்றளவில் மக்கள் காணலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.