அரியலூரில் இதுவரை 2 இலட்சம் கனமீட்டர் வண்டல் மண் எடுக்கப்பட்டுள்ளது - ஆட்சியர் தகவல்...

First Published Jun 4, 2018, 10:31 AM IST
Highlights
280 lakes 2 million cubic meters of soil taken - Collector information ...


அரியலூர்

பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 280 ஏரி மற்றும் குளங்களில் இருந்து 2 இலட்சத்து 6 ஆயிரத்து 475 கனமீட்டர் வண்டல் மண் எடுக்கப்பட்டுள்ளது என்று அரியலூர் ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம், இலந்தைக்கூடம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் நிலத்திற்கு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இலந்தைக்கூடம் பெரிய ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார். 

அப்போது ஆட்சியர், "அரியலூர் மாவட்டத்தில், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் வண்டல் மண், சௌடு மண், கிராவல் மண் ஆகியவற்றை விவசாயம், சொந்த வீட்டு உபயோகம் மற்றும் மண் பாண்டம் தயாரித்தல் ஆகியவற்றிற்கு இலவசமாக எடுத்து கொள்ளலாம். 

நடப்பாண்டில் கடந்த மே மாதம் வரை பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 280 ஏரி மற்றும் குளங்களில் இருந்து 2 இலட்சத்து 6 ஆயிரத்து 475 கனமீட்டர் வண்டல் மண் எடுக்கப்பட்டு 4075 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏரி மற்றும் குளங்களில் மட்டுமே வண்டல் மண் எடுக்கப்பட வேண்டும். 

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் விவசாய பணிக்கு நஞ்சை நிலத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 75 கனமீட்டர் அல்லது 25 டிராக்டர் லோடுகளும், புஞ்சை நிலத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 90 கனமீட்டர் அல்லது 30 டிராக்டர் லோடுகளும், 

சொந்த வீட்டு உபயோகத்திற்கு 30 கனமீட்டர் அல்லது 10 டிராக்டர் லோடுகளும், மண்பாண்டம் தயாரித்தல் பணிக்கு 60 கனமீட்டர் அல்லது 20 டிராக்டர் லோடு வண்டல் மண்ணும் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம். 

எனவே, இந்த திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் அப்பகுதியை சார்ந்த தாசில்தார்கள், வளர்ச்சித்துறை அதிகாரி, வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் முறையாக விண்ணப்பித்து, பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது" என்று அவர் கூறினார்.  

click me!