கர்நாடகம், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 2 இலட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகம், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 2 இலட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சீறி வரும் காவிரியால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே, பல பகுதிகளில் வீடுகள் தண்ணீரில் மூழ்கின.
undefined
கர்நாடகத்தில் மே மாத இறுதியில் தென்மேற்குப் பருவமழைத் தொடங்கியது. முதல் நாளில் இருந்தே அம்மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பொழிந்தது. கடந்த ஒரு வாரமாக கேரளா மாநிலம், வயநாடு மற்றும் கருநாடக மாநிலம், குடகு பகுதிகளில் பொழுந்து வரும் கனமழையால் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து எக்கச்சக்கமாய் அதிகரித்துள்ளது.
இந்த இரண்டு அணைகளில் இருந்தும் விநாடிக்கு ஒரு இலட்சத்து 90 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறந்துவிடப்பட்டது. இந்தத் தண்ணீர் கர்நாடகா - தமிழ்நாடு எல்லையான பிலிக்குண்டுலுவுக்கு கரைபுரண்டு வந்ததால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் விநாடிக்கு ஒரு இலட்சத்து 90 ஆயிரம் கன அடி தண்ணீர் ஒகேனக்கலுக்கு வந்தது. இந்நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து நேற்று மதியம் விநாடிக்கு இரண்டு இலட்சம் கன அடியாக அதிகரித்தது. இதனால், ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஐந்தருவி, சினிஃபால்ஸ் போன்ற அருவிகளே கண்ணுக்குத் தெரியாதபடி தண்ணீர் ஓடியது.
முக்கிய அருவிக்குச் செல்லும் நடைப்பாதைக்கும் மேல் தண்ணீர் சென்றது. காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் ஒகேனக்கல் சத்திரம், முதலைப் பண்ணை போன்ற பகுதிகளில் உள்ள பதினைந்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் ஊட்டமலை, ஆலம்பாடி போன்ற காவிரி கரையோரப் பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. காவிரி கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. ஒகேனக்கல், நாடார்கொட்டாய், நாகர்கோயில், முதலைப் பண்ணை போன்ற பகுதிகளிலும் தடுப்பு அமைத்து காவலாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.