உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ.15 லட்சம்… மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!

By Narendran SFirst Published Nov 2, 2021, 3:45 PM IST
Highlights

மரம் விழுந்த விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் கவிதாவின் குடும்பத்திற்கு கூடுதலாக 15 லட்ச ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக அளிக்க உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக 15 லட்ச ரூபாய் நிவாரண உதவியாக அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

கனமழை காரணமாக சென்னை தலைமைச் செயலகம் அருகே அமைந்துள்ள பழமையான மரம் இன்று காலை வேரோடு சாய்ந்து விழுந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் கவிதா மரத்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த காவலர் கவிதா அரக்கோணத்தை சேர்ந்தவர். அவருக்கு 41 வயதாகிறது. 2005 ஆம் ஆண்டு பேட்ச் காவலரான இவர், தற்போது முத்தியால்பேட்டை போக்குவரத்து பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த கவிதாவுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். முதல் மகன் அருண்குமார் சேலத்தில் கல்லூரியில் படித்து வருகிறார். மகள் சினேக பிரியா பிஎஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மூன்றாவதாக மகன் விஷால் மண்ணடியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அவர் இன்று எதிர்பாராத விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதே விபத்தில் மேலும் இரு காவலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து தீயணைப்புத்துறை அதிகாரிகள் விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த ராயபுரம் போக்குவரத்து தலைமை காவலர் முருகன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கவிதாவின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விபத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. மரத்தை அகற்றும் பணியில் மீட்புப் பணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து ஏற்பட்ட இடத்தில் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். விபத்து நிகழ்ந்த இடத்திற்கு தலைமைச் செயலாளர் இறையன்பு பார்வையிட்டார். அத்தோடு ஆபத்தான நிலையில் உள்ள பல மரங்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டுள்ளார். அதை தொடர்ந்து விபத்து நிகழ்ந்த இடத்திற்கு நேரில் சென்று டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு மேற்கொண்டார். தீபாவளி கொண்டாடப்பட உள்ள நேரத்தில் மரம் விழுந்து காவலர் உயிரிழந்தது காவல்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னை, தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்த விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் கவிதாவின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு உயிரிழந்த கவிதாவின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி, மரம் விழுந்த விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் கவிதாவின் குடும்பத்திற்கு கூடுதலாக 15 லட்ச ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து பலியான பெண் காவலர் கவிதாவின் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் நிவாரண தொகை கிடைக்கும். மேலும் இதே விபத்தில் காயமடைந்த காவலர் முருகன் மற்றும் தீயணைப்பு வீரர் செந்தில் குமார் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதோடு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள கவிதாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன் உள்ளிட்டோர்களும் வந்து அஞ்சலி செலுத்தினர்.

click me!