
தேனி
கம்பத்தில் கன்மாய் அருகே ஆடுகள் மேய்ந்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் 14 ஆடுகள் நிகழ்விடத்திலேயே பலியாயின.
தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர்கள் சுப்பிரமணி, மூக்கன், ராமசாமி, அரசன். இவர்கள் நால்வரும் சொந்தமாக ஆடுகள் வளர்க்கின்றனர்.
இவர்கள் நேற்று கம்பம் பகுதியில் உள்ள கண்மாய் அருகே தங்களது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மாலை 4.30 மணியளவில் இடி, மின்னல், சூறாவளிக்காற்றுடன் பெரும் மழை பெய்தது. உடனே நான்கு பேரும் அருகேயிருந்த மறைவானப் பகுதிக்கு ஓடிவிட்டனர்.
மாலை 5 மணியளவில் மழையில் நனைந்துக் கொண்டிருந்த ஆடுகள் மீது சட்டென்று மின்னல் தாக்கின. இதில் 14 ஆடுகள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த நால்வரும் இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர்.
அந்த தகவலின்பேரில் வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியும் இறந்து கிடந்த ஆடுகளையும் பார்வையிட்டனர்.
மின்னல் தாக்கி 14 ஆடுகள் பலியானதையொட்டி தங்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும் என்று நால்வரும் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தனர்.