ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் தீக்குளிக்க முயற்சி - விளை நிலத்தை கையகப்படுத்தியதால் விபரீதம்...

First Published Mar 29, 2018, 10:40 AM IST
Highlights
12 people including five women tried to fire


சேலம்

சேலத்தில் உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்களது நிலத்தை கையகப்படுத்த கூடாது என்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே மஞ்சினி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமலிங்கம், ராமகிருஷ்ணன். விவசாயிகளான இவர்கள் இருவருக்கும் சொந்தமான நிலம், கடந்த 1986-ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் கையகப்படுத்தப்பட்டது. 

இதனை எதிர்த்து விவசாயிகள் ராமலிங்கம், ராமகிருஷ்ணன் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த நிலையில் ஆத்தூர் ஆதிதிராவிடர் நல தாசில்தார் வெங்கடேஸ்வரன் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று முன்தினம் விவசாய நிலம் இருந்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டு அந்த நிலத்தைவிட்டு செல்லுமாறு ராமலிங்கம், ராமகிருஷ்ணன் தரப்பினரிடம் கூறினர்.

இதனால் ஆத்திரமடைந்த ராமலிங்கம், அவரது மனைவி மலர்விழி, மகன் வெங்கடேஷ், அவரது மனைவி பவித்ரா, இன்னொரு மகன் ரஞ்சித், விவசாயி ராமகிருஷ்ணன், அவரது மனைவி அஞ்சலை, ராமகிருஷ்ணனின் தம்பி பொன்னுசாமி, அவரது மனைவி பூவாயி, இன்னொரு தம்பி ஜெயராமன், அவரது மனைவி சாந்தி உள்பட 12 பேர் நேற்று காலை ஆத்தூர் உதவி ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் தங்களிடம் இருந்த கேனில் இருந்த மண்ணெண்ணெயை தங்கள் தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்று ஆவேசமாக முழக்கமிட்டனர். மேலும், தங்கள் நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தினர். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆத்தூர் காவல் உதவி ஆய்வாளார் அமிர்தலிங்கம், ரவிக்குமார், பெரியசாமி மற்றும் காவலாளர்கள் விரைந்து வந்து மண்ணெண்ணெய் ஊற்றி இருந்தவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர்.

இதில் சமாதானமடைந்த ஐந்து பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆத்தூர் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் மனுகொடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

அப்போது உதவி ஆட்சியர் அலுவலகத்திற்கு வேறுபணிக்காக வந்த ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. சின்னதம்பியிடமும், அந்த குடும்பத்தினர் கோரிக்கை மனுகொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.  

click me!