
12 மணிநேர வேலை மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என சி.ஜ.டி.யூ. பொதுச்செயலாளர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். முன்னதாக தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் வேலை செய்ய வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின் சிஐடியூ மாநில தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 3 அமைச்சர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில், இந்த சட்டம் அமைச்சர்களோ அல்லது அதிகாரிகளோ வெளியே சொல்லக்கூடிய எந்த பாதுகாப்பையும் உள்ளடக்கிய திருத்தம் அல்ல. அதுவெறுமனே வாய் வார்த்தைகளில் மட்டுமே சொல்வது.
இதையும் படிங்க: யாருக்குக் கல்யாணம்? ராகுல் படத்துடன் திருமண அழைப்பிதழ் கொடுத்த காங்கிரஸ் தலைவர்!
அந்த சட்டத்தில் அதுபோன்ற எந்த பாதுகாப்பும் இல்லை. இப்போது இருக்கின்ற சட்டத்திலேயே பல தொழிற்சாலைகளுக்கு குறிப்பிட்ட நேர்வுகளில், சில சலுகைகளைத் தரமுடியும். விதிவிலக்கும் கொடுக்க முடியும். அவ்வாறு இருக்கும்போது, அந்த ஷரத்துகளையே ஒத்திவைப்பது, தள்ளிவைப்பது, விலக்களிப்பது என்ற ஒரு திருத்தத்தைக் கொண்டு வருவது அபாயகரமானது. இது ஒவ்வொரு தொழிலாளியும் அச்சப்பட வேண்டிய ஒரு விசயம். எனவே அதனை எந்தக் காலத்திலும் ஏற்க முடியாது என்று பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அனைத்து சங்கங்களுமே கூறியிருக்கிறோம்.
இதையும் படிங்க: எங்களை கருணை கொலை செய்துவிடுங்கள்; திண்டுக்கல்லில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கதறல்
9 தொழிற்சங்கங்கள் இணைந்த எங்களது கூட்டமைப்பு சார்பில் நேற்று பேசி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம். இந்த சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்பதே அந்த தீர்மானம். இதுதொடர்பாக அரசிடம் இருந்து விளக்கம் பெற வேண்டிய தேவை தொழிற்சங்கங்களுக்கு இல்லை. இந்த சட்டம் தொடர்பான சிறிய திருத்தங்களுக்குக்கூட வழியும், வாய்ப்பும் இல்லை. எனவே சட்டத்திருத்தம் 65-ஏ வை முற்றாக ரத்து செய்ய வேண்டுமென்று, தீர்மானத்தைக் கொடுத்துள்ளோம். இதை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் அரசிடம் வலியுறுத்தியிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.