
ஈரோடு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஈரோட்டில் இரயில் மறியலில் ஈடுபட்ட அனைத்திந்திய உழவர் உழைப்பாளர் திராவிட முன்னேற்ற கட்சியினர் 115 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியில் கட்சியினர், விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சாலை மறியல், இரயில் மறியல் போராட்டம், மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் உள்பட போன்ற பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அனைத்திந்திய உழவர் உழைப்பாளர் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நேற்று ஈரோட்டில் இரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, நேற்று ஈரோட்டில் போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக கட்சி தொண்டர்கள் நேற்று காலை ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் ஒன்று கூடினார்கள்.
இந்தப் போராட்டத்துக்கு நிறுவன தலைவர் ஜெ.ஜோதிகுமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் டி.தண்டாயுதபாணி, இளைஞர் அணி செயலாளர் மணிகண்டன், துணை பொதுச்செயலாளர் அஷ்சத் ஹபீஸ், மகளிர் அணி செயலாளர் நாச்சிசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
காளை மாட்டு சிலை அருகில் ஒன்றுகூடிய கட்சி தொண்டர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு இரயிலை மறிக்க சென்றனர். அப்போது, ஈரோடு இரயில் நிலையம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த நகர துணை காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், ஆய்வாளர் விஜயன் மற்றும் காவலாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.
இதனால் அவர்கள் இரயில் நிலையம் முன்பு அமர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
அதனைத் தொடர்ந்து காவலாளர்கள் அவர்களிடம், ‘கலைந்து போகவில்லை என்றால் கைது செய்யப்படுவீர்கள்’ என்று எச்சரித்தனர். ஆனாலும் அவர்கள் அங்கிருந்து கலைந்து போகாததால் காவலாளர்கள் அவர்களை கைது செய்தனர். அவர்களில், 73 பெண்கள் உள்பட மொத்தம் 115 பேர் கைது செய்யப்பட்டனர்.