
சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமியை ஏமாற்றி மயக்க ஊசிபோட்டு முதன் முதலில் அவரை கற்பழித்தது 66 வயதான லிப்ட் ஆப்ரேட்டர் ரவிகுமார் தான் என்ற திடுக் தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 11 வயது சிறுமியை 17 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 17 பேரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
விசாரணையின் போது குற்றவாளிகள் அடுத்தடுத்து கூறிய தகவல்களால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த குற்ற சம்பவத்தின் முதல் குற்றவாளியான 66 வயதான ரவிகுமார் என்ற நபர் சிறுமி வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் ஆப்ரேட்டர் வேலை பார்த்து வந்தார்.
ரவிக்குமார் இந்த வேலைக்கு வருவதற்கு முன், அதே பகுதியில் உள்ள பிரபலமான மகப்பேறு மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை பார்த்துள்ளார். அதன் பின்னரே லிப்ட் ஆப்ரேட்டர் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
அங்கு வேலை பார்த்த போது பிரசவத்தின்போது பெண்களுக்கு ஏற்படும் வலிகளை குறைப்பதற்காக மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளையும் அதன் விவரங்களையும் தெரிந்து வைத்துக்கொண்ட ரவிக்குமார், அந்த மருந்துகளையும், ஊசிகளையும் பயன்படுத்தி சிறுமியை பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இது போலீசார் மட்டுமல்ல பொது மக்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.