
மன்னார்குடியில், மினி பேருந்து மீது, மோதியதில் 10 பேர் காயம் அடைய காரணமாக இருந்த உப்பு ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
மன்னார்குடி அருகே கட்டக்குடி கிராமத்திலிருந்து மினிபேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு மன்னார்குடி நோக்கிச் சென்றுக் கொண்டு இருந்தது.
மினிபேருந்தை பேரையூரைச் சேர்ந்த சித்திரவேல் ஓட்டி வந்தார். வேதாரண்யத்திலிருந்து உப்பு ஏற்றிக் கொண்டு மேட்டூர் சென்ற லாரி எதிரே வந்து கொண்டிருந்தது. பேருந்து காரிக்கோட்டை பிரிவு சாலை அருகே வந்த போது எதிர்பாராவிதமாக மினிபேருந்து மீது லாரி மோதியது.
இதில் பேருந்தில் பயணம் செய்த மன்னார்குடியைச் சேர்ந்த சித்ரா (50), கட்டக்குடியை சேர்ந்த அனு (22), மணியன் (62), கலையரசி, தங்கையன் (75), ஆதிச்சபுரத்தை சேர்ந்த விஜயலட்சுமி, வடபாதிமங்கலத்தை சேர்ந்த ராமு (55), ஜெகதீசன், ஓகைபேரையூரை சேர்ந்த ஜெயபால் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்களை மன்னார்குடி காவலாளர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து மன்னார்குடி காவல்துறை இன்ஸ்பெக்டர் கழனியப்பன் வழக்குப்பதிவு செய்து கீழகண்ணுமங்கலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சுதாகரன் (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.