நெல்லை மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 370 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கு புறவழிச் சாலை திட்டம் தந்த முதல்வருக்கு நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
நெல்லை மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 370 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கு புறவழிச் சாலை திட்டம் தந்த முதல்வருக்கு நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ளும் வகையில் 10.62 கோடி மதிப்பீட்டில் புதிதாக மழை நீர் வடிகால் மற்றும் சிறிய பாலங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மாநகராட்சி மேயர் சரவணன் தெரிவித்தார். நெல்லை மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மாநகராட்சி மேயர் சரவணன் தலைமையில் துணை மேயர் கே .ஆர் .ராஜூ முன்னிலையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் மேயர் சரவணன் பேசுகையில் நெல்லை மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 370 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கு புறவழிச் சாலை திட்டம் தந்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து..! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
மேலும் அவர் பேசுகையில் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மையில் நாளொன்றுக்கு 170 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இவற்றை கையாளுவதற்கு 8.45 கோடி மதிப்பில் வாகனங்கள் வாங்கப்பட உள்ளது. வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ளும் வகையில் 10.62 கோடி மதிப்பீட்டில் புதிதாக மழை நீர் வடிகால் மற்றும் சிறிய பாலங்கள் அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கப்படுகிறது. சிந்துபூந்துறை, வி.எம்.சத்திரம் பகுதியில் அமைந்துள்ள மின் மயான தகன மேடையை ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் எரிவாயு தகனம் மேடையாக அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் மாநகராட்சியில் மண் சாலைகள் 57.36 கிலோ மீட்டர் நீளம் உள்ளது.
இதையும் படிங்க: மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை தேவை... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!
இந்த சாலைகளால் மழைக்காலங்களில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு மிகுந்த சிரமமாக உள்ளதால் 37.78 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையை தார்சாலையாக மாற்றம் செய்ய 77.67 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயார் செய்து நிர்வாக அனுமதி மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பாதாள சாக்கடை திட்டம் பகுதி 2 பகுதி 3 ஆகியவற்றில் நவீன தொழில்நுட்பத்தின் கீழ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 91.91 கோடி ரூபாய் மதிப்பீடு தயார் செய்து நிதி ஒதுக்கீடு கோரி நகராட்சி நிர்வாக இயக்குனர் அனுப்பப்பட்டுள்ளதாக மேயர் தெரிவித்தார். முன்னதாக மின்வாரியம் தொடர்பான பணிகள் குறித்து மின்வாரிய நகர்புற செயற்பொறியாளர் முத்துக்குட்டி கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவித்தார். அவரிடம் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள மின்வாரிய குறைபாடுகள் குறித்து தெரிவித்தனர். பின்னர் வார்டு உறுப்பினர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் கேட்டு பேசினர்.