நாகப்பட்டினத்தில் இதுவரை 1 இலட்சத்து 10 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் கொள்முதல்...

First Published Mar 15, 2018, 8:39 AM IST
Highlights
1 lakh 10 thousand tonnes of rice cultivated in Nagapattinam


நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தில் இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ள 1 இலட்சத்து 10 ஆயிரம் டன் நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளில் அடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

காவிரி டெல்டா கடைமடை பகுதியான நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் மேட்டூர் அணை தண்ணீரை நம்பியும், பருவமழையை நம்பியுமே குறுவை, சம்பா, தாளடி உள்ளிட்ட சாகுபடிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

வருடந்தோறும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் காலத் தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி முற்றிலும் பொய்த்துபோனது. 

அதனைத் தொடர்ந்து காலதாமதமாக திறந்தவிடப்பட்ட தண்ணீரை நம்பி விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை தொடங்கினர். பயிர்கள் முளைத்து வந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் வயல்களில் மழைநீர் தேங்கி பயிர்கள் சேதமடைந்தது. இந்த முறை மட்டும் விவசாயிகள் ஒரு சாகுபடியை இரண்டு, மூன்று முறை செய்தனர். 

அதனைத் தொடர்ந்து மிஞ்சிய பயிர்களை விவசாயிகள் பாதுகாத்து வந்த நிலையில், பயிர்கள் கதிர்விட்டு வந்தபோது தண்ணீர் இன்றி கருக தொடங்கியது. இதனால் நெல்கள் பதர்களாக மாறியது. இந்த நிலையில் மிஞ்சிய பயிர்கள் அறுவடைக்கு தயாரானதால், விவசாயிகள் அறுவடை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  வறட்சியின் காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். 

இருப்பினும் கிடைத்த நெல்லை தற்போது விவசாயிகள் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்கின்றனர். நாகை மாவட்டத்தில் 237 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. 

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் தாலுகா அருந்தவன்புலம், திருப்பூண்டி, சன்னமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திறந்தவெளி நெல் சேமிப்பு மையங்களில் சேமிக்கப்படுகிறது. 

அதேபோல நாகை காடம்பாடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்தில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படுகிறது. 

இங்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. காடம்பாடியில் உள்ள சேமிப்பு மையத்தில் இதுவரை 16694 டன் நெல் மூட்டைகள் வரப்பட்டுள்ளன. 

இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 1 இலட்சத்து 10 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சேமிப்பு மையங்களில் சேமிக்கப்படும் நெல் மூட்டைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட தனியார் ஆலைகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு பின்னர் ரேசன் கடைகளுக்கு அரிசி மூட்டைகள் அனுப்பப்படும். 
 

click me!