மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது
மேல்பாதி அருள்மிகு திரௌபதி அம்மன் கோயிலில் வழிபடுவதற்கு இந்து ஆதிதிராவிடர் சமூகத்தினரை அனுமதிக்காதது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில் காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஐ எம், சிபிஐ, சிபிஐ எம்.எல், மக்கள் அதிகாரம், மமக, தமமுக, எஸ்டிபிஐ, திராவிடர் கழகம் ஆகிய அரசியல் கட்சிகள்/ இயக்கங்களின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:“விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோயிலில் அதே ஊரைச் சேர்ந்த இந்து ஆதிதிராவிட மக்கள் வழிபடுவதற்கு அங்குள்ள ஒரு சமூகப் பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 08.04.2023 அன்று அந்தக் கோயிலில் வழிபட வந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த கதிரவன் என்ற இளைஞர் அங்கிருந்த ஒரு சமூகப் பிரிவினரால் தாக்கப்பட்டார். அதைத் தடுக்க முயற்சித்த கந்தன், கற்பகம் ஆகியோரும் தாக்கப்பட்டனர். அது தொடர்பாக விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
எவர் ஒருவரையும் பொது இடத்தில் நுழைய விடாமல் தடுப்பது சட்டப்படி குற்றமாகும். அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 15 இல் அது தெளிவாக்கப்பட்டுள்ளது. அதுபோலவே அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 17 தீண்டாமையைக் கடைப்பிடிப்பதைக் குற்றம் என அறிவித்துள்ளது. The Tamil Nadu Temple Entry Authorization Act, 1947 என்ற சட்டம் அனைத்து திருக்கோயில்களிலும் இந்துக்கள் அனைவரும் தடையின்றி வழிபடுவதை உறுதி செய்துள்ளது.
அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்
கீழ் உள்ள கோயிலாகும் ( ITMS No: 22467 ) . 1978 முதல் கடந்த 45 ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அந்தக் கோயில் உள்ளது. அதற்கான ஆவணங்களும் தெளிவாக இருக்கின்றன.
undefined
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை தனது உரிமையை ஆவணங்களின் அடிப்படையில் உறுதி செய்து இருக்கிறது. கடந்த 12.04.2023 அன்று இக்கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை தக்கார் ஒருவரை நியமனம் செய்துள்ளது. உண்மை இவ்வாறு இருந்தும் ஒரு பிரிவினர் சட்டத்துக்குப் புறம்பாகத் தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் விதமாக ‘ஆதிதிராவிடர் சமூகத்தினர் வழிபடுவதை அனுமதிக்க மாட்டோம்’ என்று தடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் கல்வி முறையை மாற்ற வேண்டும் - ஆளுநர் ரவி!
இந்தப் பிரச்சினையை சமூகமாக முடிப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடந்த இரண்டு மாதங்களாகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்தப் பகுதியைச் சார்ந்த மயிலம்,விக்கிரவாண்டி, விழுப்புரம், சட்டமன்ற உறுப்பினர்களும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்ற அமைதிப் பேச்சுவார்த்தையும் நடந்திருக்கிறது . கோட்டாட்சியர் தலைமையில் பல கட்ட பேச்சு வார்த்தைகளும் நடந்துள்ளன. ஆனாலும்கூட இதுவரை எந்தத் தீர்வும் காணப்படவில்லை. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக கடந்த 02.04.2023 வெள்ளிக்கிழமை அன்று விழுப்புரத்தில் உள்ள 11 கட்சிகளின் பிரதிநிதிகள் கூடி ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பின்வரும் கோரிக்கைகளைத் தங்களது நடவடிக்கைக்காக முன்வைக்கிறோம்;
1. மேல் பாதியில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபடுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அதைத் தடுப்பவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
2. மேல்பாதி திரௌபதி அம்மன் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி அறங்காவலர் குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.
3. விழுப்புரம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 1068 திருக்கோயில்களிலும் அறங்காவலர் குழுக்களை அமைப்பதற்கு உடனடியாகநடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்கள் அனைத்திலும் வழிபாட்டில் சமத்துவம் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிக்கை பெற வேண்டும்.
5. இந்து சமய அறைநிலையச் சட்டம் 1959, பிரிவு 106 இல் ”எவ்வித பாகுபாடுமின்றி பிரசாதம், தீர்த்தம் வழங்கவேண்டும்” என உள்ளது. அதற்கு முரணாக செயல்படும் மேல்பாதி அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயில் பூசாரி அந்தப் பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டு அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
070/6/2023 வெள்ளிக்கிழமைக்குள் மேல்பாதி அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயிலில் சட்டப்படி வழிபாட்டு சமத்துவம் நிலைநாட்டப் படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யப்படாவிட்டால் அதன் பின்னர் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவதெனத் தீர்மானித்து உள்ளோம் என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.” இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.