புதுச்சேரியில் திருமணமான 6 மாதங்களில் கணவனும், கர்ப்பிணி மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் திருமணமான 6 மாதங்களில் கணவனும், கர்ப்பிணி மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியை அடுத்த மதகடிப்பட்டு மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சிவா (32). இவர் அப்பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்தார். இவருக்கும் சென்னை திருக்கழுகுன்றம் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமிக்கும் (22) கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. தற்போது விஜயலட்சுமி 4 மாதம் கர்ப்பமாக இருந்தார்.
இந்நிலையில், சிவாவின் வீட்டில் இருந்து இன்று புகை வந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து தீயணைப்பு துறைக்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கணவன் மனைவி இருவரும் சடலங்களாகக் கிடந்தனர். மேலும் சமையல் எரிவாயு டியூப் திறக்கப்பட்டு, வீடு முழுவதும் சமையல் எரிவாயு பரவி இருந்தது.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள், வீட்டில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். வீட்டில் இருந்த கட்டில் முழுவதுமாக எரிந்து தீக்கரையானது. கணவன்- மனைவி இருவருக்கும் லேசான காயம் இருந்தது. விஜயலட்சுமியின் கழுத்தில் பெரிய துப்பட்டா ஒன்று சுற்றி இருந்தது. இதனையடுத்து, இருவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் விஜயலட்சுமி தூக்கில் தொங்கி இருக்கலாம். இதைப் பார்த்த சிவா மனைவி உடலைக் கீழே இறக்கி சமையல் எரிவாயுவைத் திறந்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.