
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை சுப்பிரமணிய நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் அமிர்த வர்ஷினி (24 ). தனியார் மருத்துவமனையில் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மகளுக்கு திருமணம் செய்ய பெற்றோர் ஆசைப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர்.
ஆனால் தற்போது திருமணம் வேண்டாம் என பெற்றோரிடம் அமிர்த வர்ஷினி திட்டவட்டமாக கூறியுள்ளார். இருப்பினும் அவருடைய குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பெற்றோர் ஏற்பாடு செய்து வந்ததால் மனமுடைந்த அமிர்த வர்ஷினி, வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை சற்றும் எதிர்பாராத பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அலறி கூச்சலிட்ட படியே நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுது கதறினார். இந்த சம்பவம் தொடர்பாக திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அமிர்த வர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணத்துக்கு பெற்றோர் ஏற்பாடு செய்ததால் மனமுடைந்து பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.