திண்டிவனம் அருகே தனியார் பேருந்தில் கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(72). வனத்துறை ஊழியராகி பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் இவர் தற்போது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். இவரது மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். தனது மனைவியுடன் வெளிநாட்டில் தங்கியிருந்த ஆறுமுகத்தின் மகன், நேற்று விமானம் மூலம் சென்னை வந்தார்.
.
மகனையும் மருமகளையும் வரவேற்று வீட்டிற்கு அழைத்து வருவதற்காக ஒரு காரில் ஆறுமுகம் சென்னை சென்றுள்ளார். விமான நிலையத்தில் இருந்து மகன் மற்றும் மருமகளுடன் காரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். நேற்று அதிகாலையில் திண்டிவனம் அருகே வந்த போது முன்னால் சென்ற தனியார் பேருந்தை கார் ஓட்டுநர் முந்த முயன்ற போது எதிர்பாராத விதமாக பேருந்தின் மீது கார் பயங்கரமாக மோதியது.
இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கி அதில் பயணம் செய்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மற்ற மூவரும் படுகாயமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இடிபாடுகளில் செய்கியிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் ஆறுமுகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் திண்டிவனம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.