82 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு குழந்தை சுர்ஜித் சடலமாக மீட்கப்பட்டான். 4 நாட்கள் நடந்த மீட்புப் பணிகளுக்கு சுமார் 11 கோடி ரூபாய் செலவானதாக சமூக ஊடங்களில் தகவல்கள் பரவின. இந்தத் தகவலை பலரும் பகிர்ந்து விமர்சித்தனர்.
ஆழ்துளை கிணறில் விழுந்து இறந்த குழந்தை சுஜித்தை மீட்க நடந்த மீட்பு பணிகளுக்கு 5 லட்சம் ரூபாய் மட்டுமே செலவானது என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்.
மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25 அன்று மாலை 5.30 மணிக்கு ஆழ்துளை கிணறில் 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்தான். குழந்தையை மீட்க பல கட்ட முயற்சிகள் நடைபெற்றன. மேலும் நவீன ரிக் இயந்திரங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. ஓ.என்.ஜி.சி., எல் அண்ட் டி, என்.எல்.சி. நிறுவனங்களின் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் என ஏராளமாக குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால், 82 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு குழந்தை சுர்ஜித் சடலமாக மீட்கப்பட்டான்.
இதனையத்து அவனுடைய உடல் அடக்கமும் மணப்பாறை பாத்திமாபுதூர் கல்லறைத்தோட்டத்தில் நடைபெற்றது. 4 நாட்கள் நடந்த மீட்புப் பணிகளுக்கு சுமார் 11 கோடி ரூபாய் செலவானதாக சமூக ஊடங்களில் தகவல்கள் பரவின. இந்தத் தகவலை பலரும் பகிர்ந்து விமர்சித்தனர். இதுபற்றிய தகவல்களை மாநில வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் மறுத்திருந்தார். இந்நிலையில் சுர்ஜித் மீட்புப் பணிகளுக்கு 5 லட்சம் ரூபாய் மட்டுமே செலவு ஆனது என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க ரூ. 5 லட்சம் மட்டுமே செலவானது. அதுபோலவே மீட்புப் பணியின்போது 5 ஆயிரம் லிட்டர் டீசல் மட்டுமே செலவானது. குழந்தை சுர்ஜித்தை மீட்க 10 கோடி ரூபாய் செலவானதாகச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை. சமூக வலைத்தளங்களில் தவறான செய்தியைப் பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.