மதுரையில் இருந்து சென்னை கிளம்பிய தேஜஸ் ரயிலில் திடீரென அலார சத்தம் ஒலித்ததால் நடு வழியில் நிறுத்தப்பட்டது.
மதுரையில் இருந்து சென்னைக்கு தேஜஸ் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வாரத்தில் வியாழக்கிழமை தவிர்த்து அனைத்து நாட்களிலும் சென்னை-மதுரை, மதுரை-சென்னை ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. அனைத்து பெட்டிகளிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இந்த ரயில் இடையில் திருச்சி மற்றும் கொடரோடு ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே நிறுத்தப்படும்.
undefined
வழக்கம் போல நேற்று முன்தினம் இந்த ரயில் மதுரையில் இருந்து சென்னைக்கு மாலை 3 அளவில் கிளம்பியது. திருச்சிக்கு மாலை 4.50 வந்த ரயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு கிளம்பியது. ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் சி10 பெட்டியில் இருக்கும் கழிவறையில் இருந்து திடீரென புகை கிளம்பியது. இதனால் அந்த பெட்டியில் இருக்கும் தானியங்கி அலாரம் ஒலிக்க தொடங்கியது.
அலார சத்தம் கேட்டதும் பெட்டியில் இருந்த பயணிகள் அலறியடித்து அடுத்த பெட்டிக்கு ஓடத்தொடங்கினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக என்ஜின் ஓட்டுநர் பாதிவழியில் ரயிலை நிறுத்தினார். இதையடுத்து தொழிநுட்ப குழுவினர் வந்து சி10 பெட்டியில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மின்கசிவு எதுவும் ஏற்படவில்லை என்று தெரியவந்தது.
தொடர்ந்து கழிவறையில் ஆய்வு செய்தபோது அங்கே சிகரெட் துண்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்து கிளம்பிய புகையால் தான் அலாரம் அடித்துள்ளது. யாரோ ஒரு பயணி கழிவறையில் வைத்து சிகரெட் பிடித்ததால் தான் இவ்வளவும் நடந்திருக்கிறது.
இதையடுத்து முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட தேஜஸ் ரயிலில் கழிவறையில் வைத்து சிகரெட் பிடித்தாலும் புகை வெளியேறுவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே பயணிகள் அதை தவிர்க்குமாறு ரயில்வே நிர்வாகம் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்தினால் 15 நிமிடங்கள் தாமதமாக தேஜஸ் ரயில் சென்னை புறப்பட்டு சென்றது.