உள்ளாட்சித் தேர்தல் காரணமாக தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைந்த கல்லூரிகளின் பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல் நடைபெற இருக்கிறது. வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களிலும் ஊரக பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்படவில்லை. 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை அறிவுறுத்தி இருக்கிறது.
undefined
இந்தநிலையில் உள்ளாட்சித்தேர்தலை முன்னிட்டு அண்ணா பல்கலைக்கழக பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நடைபெறும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைந்த கல்லூரிகளில் அன்று நடைபெற இருந்த பருவ தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 27ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் ஜனவரி 2ம் தேதி நடைபெறும் என்றும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுகள் நடக்கும் 30ம் தேதியில் நடைபெற இருந்த தேர்வுகள் ஜனவரி 3ம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளன. கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், ஊழியர்கள் என அனைவரும் தேர்தலில் வாக்களிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.