பயனற்று கிடந்த ஆழ்துளைக்கிணற்றை அதிகாரிகள் மூட நடவடிக்கை எடுக்காத நிலையில் பொதுமக்கள் சேர்ந்து பெரிய பாறாங்கல்லை வைத்து மூடியுள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இருக்கும் நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்து குழந்தை சுர்ஜித் பலியான சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. 80 மணி நேரம் நடந்த மீட்புப்பணிகளின் இறுதியில் குழந்தை சுர்ஜித் சடலமாக தான் வெளியே எடுக்கப்பட்டான். தமிழக மக்களின் நெஞ்சில் நீங்காத துயரத்தை இந்த சம்பவம் ஏற்படுத்தியதை தொடர்ந்து மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளைக்கிணறுகளை உடனடியாக மூட அரசு உத்தரவிட்டது.
undefined
மாவட்ட ஆட்சியர்கள் நேரடி கண்காணிப்பில் பயனற்ற ஆழ்துளைக்கிணறுகள் மூடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மூடப்படாமல் இருந்த ஆள்துளைக் கிணற்றை பொதுமக்கள் கல்லை கொண்டு மூடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இருக்கிறது ஆட்டுக்காரன்புதூர் கிராமம். இந்த ஊரின் சாலை ஓரத்தில் ஆழ்துளைக்கிணறு ஒன்று வெகுநாட்களாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்திருக்கிறது. இதனிடையே சுர்ஜித்தின் மரணத்திற்கு பிறகு ஆழ்துளைக்கிணறுகளை அரசு மூடிவருவதால், ஆட்டுக்காரன்புதூரில் இருக்கும் ஆழ்துளைக்கிணற்றையும் அரசு மூடிவிடும் என்று அந்த ஊர் மக்கள் எதிர்பார்த்து காத்திருந்திருக்கின்றனர். ஆனால் அதிகாரிகள் யாரும் ஆழ்துளைக்கிணற்றை மூட நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் அந்த பகுதியில் இருப்பவர்கள் சேர்ந்து பெரிய பாறாங்கல்லை எடுத்து அந்த ஆழ்துளைக்கிணற்றின் மீது வைத்து மூடியுள்ளனர். இதுதொடர்பாக அந்த ஊர் மக்கள் கூறும்போது, பயனற்று இருக்கும் இந்த ஆழ்துளை கிணற்றை உடனடியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாறாங்கல்லால் மூடப்பட்ட ஆழ்துளைக்கிணற்றின் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.