திருச்சியில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் ஜார்கண்டைச் சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜெப்ரா பர்வீன். இவர் திருச்சியில் இருக்கும் ஒரு தனியார் மகளீர் கல்லூரியில் பயின்று வந்துள்ளார். இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களுடன் ஜெப்ரா பர்வீனும் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார்.
நேற்று வெகுநேரமாக ஜெப்ரா பர்வீன் தனது அறையில் இருந்து வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் மாணவிகள் சிலர் அவரது அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு ஜெப்ரா பர்வீன் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் கதறி அழுதுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு வந்த விடுதி காப்பாளர் இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் தகவல் அளித்தார்.
விரைந்து வந்த காவலர்கள் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். பாடங்களை ஆங்கிலத்தில் புரிந்து கொள்வதற்கு மாணவி சிரமப்பட்டதாகவும் அதன்காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்று கல்லூரி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அதை மறுத்த ஜெப்ரா பர்வீனின் தோழிகள் செல்போன் பயன்படுத்தியதை விடுதி காப்பாளர் கண்டித்தாகவும் அதில் அவர் மனமுடைந்து காணப்பட்டார் என்று தெரிவித்தனர். அதன்காரணமாக தான் ஜெப்ரா பர்வீன் தற்கொலை செய்திருக்கிறார் என்று சரமாரியாக குற்றசாட்டுகளை தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அண்மையில் தான் சென்னை ஐ.ஐ.டியில் கேரளவைச் சேர்ந்த பாத்திமா என்கிற மாணவி பேராசிரியர்கள் மனஉளைச்சல் கொடுத்ததாக தற்கொலை செய்திருந்தார். அந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மீண்டும் ஒரு மாணவி தற்கொலை செய்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காவு வாங்கிய விளம்பர வெறி..! அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்த விபத்தில் இளம்பெண்ணின் கால் அகற்றம்..!