கொரோனா பீதியில் செம கல்லா கட்டிய தமிழக அரசு ... டாஸ்மாக் வருமானம் எத்தனை கோடி தெரியுமா..?

By vinoth kumarFirst Published Mar 23, 2020, 1:25 PM IST
Highlights

கொரோனாவை தடுக்க கட்டம் கட்டியும், வரிசையாக கோடு போட்டும் அதில் நிற்க வைத்து மதுவாங்க வேண்டும் என வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் இந்த உத்தரவை பல இடங்களில் வாடிக்கையாளர்கள் பின்பற்றவில்லை. கூட்டம் கூட்டமாகவே முண்டியடித்துக்கொண்டு பிராந்தி, விஸ்கி, ரம், பீர் உள்ளிட்ட மதுபான வகைகளை வாங்கி குவித்தனர்.

ஊரடங்கு எதிரொலியால் நேற்று டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அறிவித்த சில மணிநேரங்களிலேயே குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்தனர். ஒரே நாளில் மட்டும் ரூ.220 கோடிக்கு மது விற்பனை செய்து தமிழக அரசு சரித்திர சாதனை படைத்துள்ளது.

கொரோனா வைரஸ் பீதியால் உலக நாடுகள் செய்வதறியாமல் திகைத்து போயியுள்ளனர். இந்நிலையில், கொரோனாவை தடுக்க இந்தியா முழுவதும் நேற்று சுயஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரையில் சுயஊரடங்கு இன்று அதிகாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது. 

இந்நிலையில், சுயஊரடங்கை முன்னிட்டு தமிழகத்தில் நேற்று வணிக வளாகங்கள், பேருந்துகள், ரயில் சேவைகள், மெட்ரோ ரயில் சேவைகள் உள்ளிட்ட எதுவும் இயங்கவில்லை. இதேபோல், டாஸ்மாக் கடைகளும், பார்களும் முழுமையாக மூடப்பட்டன. டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்ததும் குடிமகன்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து,  நண்பகல் 12 மணிக்கு திறக்கும் டாஸ்மாக் கடைக்கு காலை 10 மணிக்கே வரிசை குடிமகன்கள் நின்று கொண்டனர். 

கொரோனாவை தடுக்க கட்டம் கட்டியும், வரிசையாக கோடு போட்டும் அதில் நிற்க வைத்து மதுவாங்க வேண்டும் என வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் இந்த உத்தரவை பல இடங்களில் வாடிக்கையாளர்கள் பின்பற்றவில்லை. கூட்டம் கூட்டமாகவே முண்டியடித்துக்கொண்டு பிராந்தி, விஸ்கி, ரம், பீர் உள்ளிட்ட மதுபான வகைகளை வாங்கி குவித்தனர். தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை களை கட்டியது. கொரோனா வைரஸ் பீதியும், பதற்றமும் தமிழகத்தை தொற்றிக்கொன்ற போதிலும், மதுப்பிரியர்கள் தளர்ச்சி அடையவில்லை. விடுமுறை தினத்துக்கு தேவையான மதுபானங்களை வாங்குவதிலேயே அவர்கள் கண்ணும், கருத்துமாக செயல்பட்டனர்.

அந்தவகையில், கடந்த 21-ம் தேதி மட்டும் டாஸ்மாக் நிர்வாகம் ரூ.220 கோடி வருமானம் ஈட்டி உள்ளது. இதில் 62 சதவீதம் பிராந்தி, விஸ்கி, ரம் உள்ளிட்ட மது வகைகளும், 38 சதவீதம் பீர் வகைகளும் அடங்கும். அன்று மட்டும் சென்னை மண்டலத்தில் ரூ.48.61 கோடியும், மதுரை மண்டலத்தில் ரூ.41.54 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.41.22 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.43.52 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.45.60 கோடியும் மதுவிற்பனை நடந்துள்ளது. மொத்தமாக ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ரூ.220.49 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!