குழந்தை சுர்ஜித்தை மீட்க அரசு இயந்திரம் முழுமையாக பணியாற்றிக்கொண்டிருக்கிறது. குழந்தை ஆழ்துளை கிணறில் விழுந்த அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் பணிகள் தொடங்கிவிட்டன.
தமிழகத்தில் அனுமதி இல்லாமல் போடப்பட்ட ஆழ்துளை கிணறுகள், பயனில்லாத ஆழ்துளை கிணறுகளை மூட அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீசெல்வம் தெரிவித்துள்ளார்.
மணப்பாறை அருகே நடுக்காட்டிப்பட்டியில் குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் தள்ளியது. குழந்தை உயிரோடு மீண்டு வர வேண்டும் என்று தமிழக மக்கள் பிரார்த்தனை செய்துவருகிறது. குழந்தையை உயிரோடு மீட்பதில் அரசு இயந்திரங்கள் முழுமையாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சம்பவம் நடந்த நாளில் இருந்து அமைச்சர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் நடுக்காட்டிப்பட்டியில் இருந்து மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்துவருகிறார்கள். பின்னர் அமைச்சர்கள் உதயகுமார், எம்.ஆர். விஜயபாஸ்கர், வளர்மதி ஆகியோரும் மீட்பு பணிகள் நடக்கும் இடத்துக்கு வந்து பணிகளை மேற்பாரவையிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரவு நடுக்காட்டிப்பட்டிக்கு வந்தார். மீட்பு பணிகளை பார்வையிட்ட அவர், குழந்தை சுர்ஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், “குழந்தை சுர்ஜித்தை மீட்க அரசு இயந்திரம் முழுமையாக பணியாற்றிக்கொண்டிருக்கிறது. குழந்தை ஆழ்துளை கிணறில் விழுந்த அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் பணிகள் தொடங்கிவிட்டன.
குழந்தையை உயிரோடு மீட்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். குழந்தையை உயிரோடு மீட்பதிலும் உறுதியாக இருக்கிறோம். தமிழகத்தில் அனுமதி இல்லாமல் போடப்பட்ட ஆழ்துளை கிணறுகள், பயனில்லாத ஆழ்துளை கிணறுகளை மூட அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்கும்.” என்று தெரிவித்தார்.