என் தங்கச்சியே கிண்டல் செய்து போட்டோ எடுக்குறியா.. வாலிபரை அடித்தே கொன்ற அண்ணன்.. திருச்சியில் பயங்கரம்.!

By vinoth kumar  |  First Published Apr 19, 2023, 1:28 PM IST

நேற்று இரவு பணிகளை முடித்துவிட்டு சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடி செல்லும் தனியார் பேருந்தில் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது பேருந்தில் இருந்த லூர்து ஜெயக்குமார் அந்தப் பெண்ணை புகைப்படம் எடுத்து கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.


திருச்சியில் பேருந்தில் தங்கையை புகைப்படம் எடுத்து கிண்டல் செய்த இளைஞரை அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அண்ணனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த கபிரியேல்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன் சந்தானம். இவரது மகன் லூர்து ஜெயக்குமார் (29).  இவர் திருச்சியில் உள்ள தனியார் பர்னிச்சர் கடையில் லிப்ட் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். அதேபோல் லால்குடி அருகே மாந்துரை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் திருச்சியில் உள்ள தனியார் ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர்கள் பணிகளை முடித்துவிட்டு வழக்கம்போல் பேருந்தில் வீட்டுக்கு செல்வது வழக்கம்.

Latest Videos

இந்நிலையில் நேற்று இரவு பணிகளை முடித்துவிட்டு சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடி செல்லும் தனியார் பேருந்தில் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது பேருந்தில் இருந்த லூர்து ஜெயக்குமார் அந்தப் பெண்ணை புகைப்படம் எடுத்து கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் அவரது அண்ணன் குப்புசாமிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, குப்புசாமி அவரது நண்பர்களை அழைத்துக் கொண்டு கபிரியேல்புரம் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றுள்ளார். 

அங்கு பேருந்திலிருந்து இறங்கிய லூர்து ஜெயக்குமாரை அடித்து உதைத்துள்ளனர். பின்னர் லால்குடி காவல் நிலையம் அழைத்துச் சொல்வதாக கூறி இருசக்கர வாகனத்தில் மாந்துரை அக்ரஹாரம் சிவன் கோயில் அருகில் வைத்து  கடுமையாக அடித்து உதைத்துள்ளனர். இதில் லூர்து ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிண்டல் செய்ததாக கூறிய பெண்ணின் அண்ணன் குப்புசாமியை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து கைது செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக பாண்டி உள்ளிட்ட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

click me!