திருவாரூரில் கிரிக்கெட் விளையாட்டின்போது ஏற்பட்ட மோதலில் 15 வயது சிறுவன் தாக்கியதில் 20 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழந்தான்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மணவாளன் பேட்டை காலனி தெருவைச் சேர்ந்த தேவேந்திரன் - சாந்தி தம்பதிகளுக்கு ஆறு மகள்கள் மற்றும் அஜித் குமார் (வயது 20) என்ற ஒரே மகன் இருந்துள்ளான். இந்த நிலையில் அஜித்குமார் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தம், உமா தம்பதியரின் 15 வயது மகன் உள்ளிட்ட நண்பர்களுடன் அருகே உள்ள வயல்வெளியில் கிரிக்கெட் விளையாடி உள்ளனர்.
அப்பொழுது விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், சிறுவன் கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்திய சவுக்கு மரத்தில் ஆன ஸ்டெம்ப்பை கொண்டு அஜித் குமாரின் நெற்றியில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அஜித்குமார் உடனடியாக நிலைகுலைந்து மயங்கி விழுந்துள்ளார்.
அண்ணன் என நம்பி வந்த சிறுமி; மனநலம் பாதித்தவர் என்றும் பாராமல் காமுகன்கள் செய்த கொடூர செயல்
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், அஜித் குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பொழுது அஜித்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து அஜித்குமாரின் உடல் உடற்கூறு ஆய்விற்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து நன்னிலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஜித் குமாரின் உடன் பிறந்த சகோதரிகள் மூவருக்கு திருமணம் ஆகி உள்ள நிலையில், மற்ற மூன்று சகோதரிக்கு திருமணம் ஆகவில்லை. ஒரே ஆண் மகனான அஜித்குமார் இறந்ததில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.