இறுதியாக சிகிச்சையில் இருந்த இருவரும் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திருவாரூர் மாறியிருக்கிறது. எனினும் அங்கு தொடர்ந்து முன்னெச்சரிக்கை பணிகள் நடந்து வருகிறது.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் உச்சம் அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,740 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி 7,270 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 4,406 பேர் குணமடைந்திருக்கும் நிலையில் 81 உயிர்களை கொரோனா வைரஸ் காவு வாங்கி இருக்கிறது. தமிழகத்திலேயே தலைநகர் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,117 ஆக அதிகரித்துள்ளது.
undefined
சென்னையை தொடர்ந்து திருவள்ளூரில் 566 பேருக்கும், செங்கல்பட்டில் 537 பேருக்கும், கடலூரில் 418 பேருக்கும் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு சில தளர்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராத 12 மாவட்டங்களுக்கு பழைய கட்டுப்பாடுகளே தொடரும் என அரசு அறிவித்துள்ளது. தற்போது வரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களாக ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் ஆகியவை இருக்கின்றன. அந்த வரிசையில் திருவாரூரும் இணைந்துள்ளது.
கொரோனா தொற்று தமிழகத்தில் வேகமாக பரவத்தொடங்கிய நேரத்தில் திருவாரூரில் பாதிப்புகள் அதிகரித்தன. அம்மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டில் பலர் பங்கேற்றிருந்த நிலையில் அவர்களுக்கு பரிசோதனை நடந்ததில் பாதிப்புகள் கண்டறியப்பட்டன. தொடர்ந்து சுகாதாரத் துறையினர் நடத்திய பரிசோதனைகளில் மாவட்டம் முழுவதும் 32 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 30 பேர் மெல்ல மெல்ல குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இறுதியாக சிகிச்சையில் இருந்த இருவரும் தற்போது குணமடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திருவாரூர் மாறியிருக்கிறது. எனினும் அங்கு தொடர்ந்து முன்னெச்சரிக்கை பணிகள் நடந்து வருகிறது.