
திருவாரூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்கள் சிலர் சட்டை பட்டனை கழற்றிவிட்டு வகுப்பறைக்குள் குத்தாட்டம் போடும் வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வகுப்பறைக்குள் குத்தாட்டம்
கடந்த சில தினங்களாக அரசுப்பள்ளி மாணவர்கள் பள்ளிகளில் அட்டகாசம் செய்து தொடர்பான செய்திகள் தினமும் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் சூரனூர் அரசுப்பள்ளியில் மாணவர்கள் வகுப்பறைக்குள் நடனமாடி அதனை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலானது.
மாணவர்கள் அட்டகாசம்
இதனையறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் இதுகுறித்து அப்பள்ளியின் தலைமையாசிரியரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். தலைமையாசிரியரின் விளக்கத்திறகு பின்பு மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவுபேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் நேரில் சென்று மாணவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார். அப்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட 9 மாணவர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி கொண்டு கடுமையாக எச்சரித்தார். அப்போது, ‘இனியும் யாராவது நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரிக்கை விடுத்தார்.