மனைவியை மதம் மாற்ற முயற்சி; சீருடையுடன் வந்து புகாரளித்த ராணுவ அதிகாரியால் பரபரப்பு

By Velmurugan sFirst Published Apr 17, 2023, 10:44 PM IST
Highlights

திருவாரூர் மாவட்டத்தில் தனது மனைவியை கட்டாய மதம் மாற்றம் செய்ய முயற்சிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ராணுவ வீரர் ராணுவ உடையில் வந்து மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் அருகே உள்ள சேந்தமங்கலம் நேருநகர் பகுதியைச் சேர்ந்தவர் தனபால். இவர் தஞ்சாவூரில் உள்ள ஏர்போர்சில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். வீட்டில்  அவரது மனைவி காந்திமதி தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இராணுவ வீரர் தனபால் தனது மனைவியுடன் இன்று காலை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக சீருடையுடன் வந்திருந்தார்.

அந்த மனுவில்  தனது வீட்டிற்கு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரப்பு செய்து ராஜேந்திரன் என்பவர் கூடாரம் அமைத்து பேய், பிசாசு விரட்டுவது, இந்து மத கடவுளை தரக் குறைவாக பேசிக்கொண்டு சபை நடத்தி வருகிறார். அங்கு தினமும் மைக், ஸ்பீக்கர் வைத்துக்கொண்டு சத்தம், கூச்சல் எழுப்பி தொந்தரவு செய்து வருவதாகவும். இதனால் தனது குழந்தையின் படிப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  நான் ராணுவத்தில் பணிபுரிந்து விடுமுறையில் வீட்டிற்கு வந்தால் கூட மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்றும், ராஜேந்திரன் மைக் வைத்துக்கொண்டு சத்தம், கூச்சல் செய்து வருவதுடன் இந்து மதத்தில் இருந்து மதம் மாறிய ராஜேந்திரன் மற்ற இந்துக்களையும் எங்கள் குடும்பத்தையும் மதம் மாற சொல்லி வற்புறுத்துகிறார். மேலும் நவம்பர் 2019 அன்று கோட்டாட்சியர் இது பற்றி விசாரணை நடத்தி விசாரணை முடிவில் கூடாரத்தை காலி செய்யுமாறு உத்தரவிட்டார். ஆனால் தற்போது வரை கூடாரத்தை அகற்றவில்லை.

இப்பொழுது ஒரு மாதமாக செய்தியாளர் என்று சொல்லிக்கொண்டு இன்னும் சில தீய ஆபாச வேலைககளில் தன் வசம் ரவுடிகளை வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கும் எங்களுக்கும் மிகவும் மன உளைச்சலைத் தருகிறார். இதுகுறித்து பல முறை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் எனது மனைவியை தகாத வார்த்தைகளில் மிகவும் தரக்குறைவாக பேசுகிறார். எந்த நேரமும் பாக்கெட்டில் மொபைல் வைத்துக்கொண்டு தனியாக இருக்கும் என் மனைவியை போட்டோ எடுக்கிறார். என் மனைவி, குழந்தைகள்  தனியாக இருக்கும் நேரத்தில் என் வீட்டில் கல்லெறிந்து பயமுறுத்துகிறார் எனவும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து தனபாலின் மனைவி காந்திமதி கூறுகையில் என்னை அவர் மதம் மாற்ற முயற்சிக்கிறார். அதற்கு நான் அடிபணியாததால் என்னை ஆபாசமாக திட்டுவது, புகைப்படம் எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

click me!