திருவாரூர் அருகே மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை மாவட்ட ஆட்சியர் நேரடியாக சென்று ஆய்வு செய்த நிலையில், முழுமையாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் மழை நீரில் சாய்ந்தன. திருவாரூர் வடபாதிமங்கலம் விக்கிரபாண்டியம் தூத்துக்குடி நன்னிலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கர் நெல் பயிர்கள் மழை நீரில் சாய்ந்தன.
அதனையடுத்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை ஆய்வு செய்து தமிழக முதல்வர் ஒரு ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் நிவாரணம் அறிவித்தார்.
undefined
இந்த நிலையில் இன்று நன்னிலம் அருகே தூத்துக்குடி மணவாளம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரடியாக சென்று ஆய்வு செய்தார் அப்பொழுது விவசாயிகள் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை நேரடியாக எடுத்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்தனர் மேலும் நன்னிலம் பகுதி முழுவதும் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது இதனை முழுமையாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் முன்வைத்தனர்.