கோவில் பூசாரிகளை குளிர்வித்த எடப்பாடி..! 1000 ரூபாய் நிவாரணம் அறிவிப்பு..!

By Manikandan S R S  |  First Published May 13, 2020, 8:50 AM IST

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு மேலும், ரூ.1,000 நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 


தமிழகத்தில் கொரோனா நோயின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றுவரை 8,718 பேர் கொரோனா நோயால் தாக்கப்பட்டு 61 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் தடை உத்தரவு மிகக் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு மேலும், ரூ.1,000 நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு கரோனா வைரஸ் நோய் தொற்றினைத் தடுக்க பல்வேறு தீவிர நோய்த் தடுப்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு காலகட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தைக் காத்திடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் பங்குத்தொகை/ தட்டுக்காணிக்கை மட்டுமே பெறும் 2,108 அர்ச்சகர்கள்/ பட்டாச்சாரியார்கள்/ பூசாரிகளுக்கும், ஒரு கால பூஜை நிதியுதவி பெறும் திருக்கோயில்களில் பணிபுரியும் 8,340 அர்ச்சகர்கள் / பட்டாச்சாரியார்கள் / பூசாரிகளுக்கும், கோயில்களில் ஊதியமின்றி பங்குத்தொகை மட்டுமே பெற்றுக்கொண்டு பணிபுரியும் நாவிதர், பண்டாரம் / பண்டாரி, மாலைக்கட்டி, பரிச்சாரகர்/ சுயம்பாகம், வில்வம், காது குத்துபவர்/ ஆசாரி, நாமவளி, மிராசு கணக்கு, கங்காணி திருவிளக்கு, முறைகாவல் மேளம், நாதஸ்வரம், குயவர், புரோகிதர், தாசநம்பி போன்ற பணியாளர்களுக்கு ஏற்கெனவே சிறப்பு நேர்வாக ரூ.1,000 ரொக்க நிவாரணமாக வழங்கப்பட்டுவிட்டது.

ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால், மேற்குறிப்பிட்ட பிரிவினருக்கு மேலும் ரூபாய் 1,000 ரொக்க நிவாரணத் தொகையாக திருக்கோயில் நிதியிலிருந்து வழங்கப்படும். இவ்வாறு தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!