அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 1 வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்கிறது. இதன்காரணமாக அணைகள் நிரம்பி ஆறுகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று வானிலை மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்தநிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய கூடும் என்று வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இருக்கும் பாபநாசத்தில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.