மதுக்கடைக்கு கடும் எதிர்ப்பு..! வெடித்தது போராட்டம்..!

By Manikandan S R SFirst Published May 8, 2020, 12:08 PM IST
Highlights

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருக்கும் பாபநாசம் சாலையில் கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி புதியதாக டாஸ்மாக் திறக்கப்பட்டது. ஏற்கனவே அப்பகுதியில் பெண்கள் மேல்நிலையப்பள்ளி அருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளது. அதே பகுதியில் மூன்றாவதாக டாஸ்மாக் திறக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து திறக்கப்பட்ட மறுநாளே புதிய கடை மூடப்பட்டது.


இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் அசுர வேகம் எடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என அரசு அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில் அம்பாசமுத்திரத்தில் திறக்கப்பட்ட மதுக்கடைக்கு எதிராக 100க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருக்கும் பாபநாசம் சாலையில் கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி புதியதாக டாஸ்மாக் திறக்கப்பட்டது. ஏற்கனவே அப்பகுதியில் பெண்கள் மேல்நிலையப்பள்ளி அருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளது. அதே பகுதியில் மூன்றாவதாக டாஸ்மாக் திறக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து திறக்கப்பட்ட மறுநாளே புதிய கடை மூடப்பட்டது. இதனிடையே மார்ச் 24ஆம் தேதி முதல் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தமிழகம் முழுவதும் இருந்த டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு நேற்றுமுதல் மீண்டும் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டதால் பாபநாசம் சாலையில் இருந்த அந்தக் கடையும் திறக்கப்பட்டு இருக்கிறது. இது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இன்று காலையில் அம்பாசமுத்திரம் நகரத்தில் இருக்கும் அனைத்து கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பாக பெண்கள் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மதுக்கடை முன்பாக போராட்டம் நடத்தினர். மதுக்கடைக்கு எதிராக கோஷமிட்ட அவர்கள் உடனடியாக கடையை இழுத்து மூட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதை அறிந்து விரைந்து வந்த காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்

click me!