1843 ம் வருடம் நவம்பர் 27ம் தேதி பாலம் திறக்கப்பட, அன்று யானை முன்னே செல்ல பாலம் உருவாகுவதற்கு முழுமுதற்காரணமாக அமைந்த சுலோச்சன முதலியாரையும் அவரது குடும்பத்தினரையும் முதலாவதாக பாலம் வழியாக நடக்கச்செய்து ஆங்கிலேய அரசு கௌரவப்படுத்தியிருக்கிறது. பாலம் உருவாகி தற்போது 177 வயதை தொட்டிருக்கும் நிலையில் பலமுறை ஏற்பட்ட வெள்ளத்தையும் தாங்கி 'சுலோச்சன முதலியார் பாலம்' கம்பீரமாக நிற்கிறது.
தமிழகத்தின் பொதிகை மலையில் உற்பத்தியாகி 128 கிலோமீட்டர் தூரம் பயணித்து தமிழகத்திற்குள்ளேயே கடலில் கலக்கும் ஒரே ஜீவநதியாக தென் எல்லையில் பாய்ந்தோடும் தாமிரபரணி அமைந்திருக்கிறது. தமிழகத்தின் இரட்டை நகரங்களாக வர்ணிக்கப்படும் திருநெல்வேலியையும் பாளையங்கோட்டையையும் பிரித்து செல்லும் தாமிரபரணி, ஸ்ரீவைகுண்டம் கடந்து கடலில் கலக்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து பாய்ந்து வரும் தாமிரபரணி ஆற்றில் அக்காலத்தில் ஏப்ரல், மே மாதங்கள் தவிர மற்ற அனைத்து மாதங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியிருக்கிறது.
இதனிடையே திருநெல்வேலியில் இருந்து பாளையங்கோட்டைக்கு செல்வதற்கு பாலம் இல்லாத காரணத்தால் மக்கள் ஆற்றில் நீந்தி செல்லும் நிலை இருந்திருக்கிறது. அவ்வாறு செல்லும் போது வயதானவர்கள், குழந்தைகள் என பலர் பலியாகும் சம்பவம் தொடர்கதையாக இருந்திருக்கிறது. வசதி படைத்தவர்கள் பரிசலில் பணம் கொடுத்து சென்று வந்திருக்கின்றனர். அதிலும் இடம்பிடிப்பதில் அடிதடி, தகராறு என பலமுறை நடந்துள்ளது. பாலம் கட்டுவது தொடர்பாக ஆங்கிலேய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் தான் 1840 ம் ஆண்டு மார்ச் 10 ம் தேதி படகுத்துறையில் கலவரம் வெடிக்கவே அதில் 5 கொல்லப்பட்டனர்.
இதன் பிறகு உடனடி நடவடிக்கை எடுத்த அப்போதைய ஆட்சியர் ஈ.பி.தாம்சன், பாலம் கட்டுவதற்கு ஆங்கிலேய தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வேலைகளை தொடங்கச் செய்தார். கேப்டன் ஃபேபர், பொறியாளரான டபிள்யூ.ஹெச்.ஹார்ஸ்லே தலைமையிலான குழுவினர் பாலம் கட்டுவதற்கான வரைபடத்தை தயாரித்தனர். 760 அடி நீளம், 21.5 அடி அகலம், 60 அடி விட்டம் கொண்ட 11 ஆர்ச்சுக்கள், அவற்றைத் தாங்கிட இரட்டைத் தூண்கள் என பிரமாண்டமான வரைபடம் தயாரானது. அப்போதைய மதிப்பீட்டில் பாலம் கட்டுவதற்கு அரை லட்சம் கணக்கிடப்பட்டது. ஆனால் ஆங்கிலேய அரசு பாலத்திற்கு நிதியை ஒதுக்குவதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்ய முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
அப்போது பாலத்திற்கான முழு செலவையும் ஏற்பதாக ஒருவர் முன்வந்தார். அவர் தான் சுலோச்சன முதலியார். ஆங்கிலேய ஆட்சியரிடம் சிரஸ்தாரராக வேலைபார்த்து பார்த்து வந்த சுலோச்சன முதலியார் செங்கல்பட்டு அருகே இருக்கும் திருமணம் என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர். மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை காலத்தில் குடும்பத்துடன் நெல்லைக்கு குடிபெயர்ந்துள்ளனர். மக்களிடம் பணம் வசூலிப்பதை விரும்பாத அவர் தானே பாலம் கட்டுவதற்கு நிதி வழங்குவதாக முடிவெடுக்கிறார். அதற்கு அவரின் மனைவியும் மனமுவந்து தனது நகைகளை கொடுத்து பாலம் கட்ட உதவியிருக்கிறார்.
இதையடுத்து பாலம் கட்டும் வேலைகள் வேகமெடுத்தன. திருநெல்வேலி அருகே இருக்கும் ஒரு கோட்டையில் இருந்து பாறைகள் உடைக்கப்பட்டு கற்கள் கொண்டு வரப்பட்டன. சிறையில் இருந்து கைதிகள் பாலம் கட்டும் பணியில் ஈடுபட 1843 ம் ஆண்டு லண்டனில் உள்ள தேம்ஸ் நதியில் அமைந்துள்ள வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தைப் போன்று பிரமாண்டமாக உருவாகியது. பாலத்திற்கு திறப்பு விழா வேலைகள் தடபுடலாக நடைபெற்று வந்தது. அப்போது என்ன பெயர் வைப்பது என்று அனைவரும் சிந்திக்க, சற்றும் யோசிக்காமல் பாலம் வழங்க நன்கொடை வழங்கிய சுலோச்சன முதலியார் பெயரை வைக்க ஆட்சியர் உத்தரவிடுகிறார். இப்போதும் அதே பெயரில் தான் பாலம் அழைக்கப்படுகிறது.
1843 ம் வருடம் நவம்பர் 27 ம் தேதி பாலம் திறக்கப்பட, அன்று யானை முன்னே செல்ல பாலம் உருவாகுவதற்கு முழுமுதற்காரணமாக அமைந்த சுலோச்சன முதலியாரையும் அவரது குடும்பத்தினரையும் முதலாவதாக பாலம் வழியாக நடக்கச்செய்து ஆங்கிலேய அரசு கௌரவப்படுத்தியிருக்கிறது. பாலம் உருவாகி தற்போது 177 வயதை தொட்டிருக்கும் நிலையில் பலமுறை ஏற்பட்ட வெள்ளத்தையும் தாங்கி 'சுலோச்சன முதலியார் பாலம்' கம்பீரமாக நிற்கிறது. திருநெல்வேலியையும் பாளையங்கோட்டையையும் இணைக்கும் முக்கிய வழியான இதன் அருகே தற்போது 18 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் பாலம் திறக்கப்பட்ட நாளில் சமூக ஆர்வலர்கள் ஒன்று திரண்டு பாலத்தின் கல்வெட்டிற்கு மாலை அணிவித்து மரியாதையை செய்கின்றனர். பாலத்தை புராதன சின்னமாக பாதுகாக்க வேண்டும் என்றும், பாலம் தோன்றிய நாளில் அரசு சார்பாக விழா எடுக்க வேண்டும் என்றும் நெல்லை மாவட்ட எழுத்தாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
176 ஆண்டுகளாக மழை,வெள்ளம், புயல் என அனைத்தையும் தாங்கி சுண்ணாம்புச் சாந்து போன்றவை பயன்படுத்தி கட்டப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கும் 'சுலோச்சன முதலியார் பாலம்' திருநெல்வேலிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்கே பெருமை தான்!